தமிழகத்தின் பட்டிதொட்டிவரை பரபரப்பாகப் பார்க்கப்பட்டு வந்த விஜய் டி.வி.யின் சூப்பர் டூப்பர் ஹிட் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இளம்பாடகி அனுஷா முதல் பரிசை வெல்வார் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அப்பரிசை குட்டிப் பாடகர் ரித்விக் வென்று சாதனை படைத்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’ நிகழ்ச்சி நேற்றுடன் (ஏப்ரல் 21)முடிவடைந்தது. கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி 10 ஆண்டுகளை கடந்து இசைத் துறைக்கு பல இளம் பாடகர்களை தந்துள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது பிசியாகப் பாடிவரும் பல பாடகர்கள் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் கொடைகளே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பாடகர்கள் தெலுங்கு,மலையாள சினிமாவிலும் ஜொலித்து வருகின்றனர். இதுவரை இந்த சீஸனின் இறுதிப் போட்டியில் தேர்வான அஹானா, சின்மயி, அனுசுயா,  மற்றும் பூவையார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த போட்டியின் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டனர்.

 யாரும் எதிர்பாராத வகையில் படு சர்ப்ரைசாக இந்த தொடரின் வெற்றியாளராக ரித்விக் அறிவிக்கப்பட்டார் அவருக்கு முதல் பரிசாக 50 லட்சம் மதிப்புள்ள வீடு வழங்கப்பட்டது. மேலும், இரண்டாவது இடத்தை சூர்யா தட்டிச்சென்றார், அவருக்கு 25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது பரிசை அனைவரின் அபிமான பாடகர் ஆன பூவையார் வென்றார் அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. 

இந்த சீசனின் இறுதிப்போட்டி வரை மிகப்பிரமாதமான பாடல்களைப் பாடி  லட்சக்கணக்கான உள்ளங்களைக் கொள்ளை கொண்ட  அனுஷாவிற்க்கு பரிசே வழங்கவில்லை. ஆனால், அவருக்கு பதிலாக ரித்விக் முதல் பரிசை வென்றது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அனுஷாவுக்கு சிறப்புப் பரிசு எதையாவது வழங்கி அவரைக் கவுரவப் படுத்தியிருக்கவேண்டும் என்ற குரல் வலைதளங்களில் ஓங்கி ஒலித்துவருகிறது.