நண்பர்களே… ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் குறித்தான சில நண்பர்களின் கிண்டல்களையும் எள்ளலான நிராகரிப்புகளையும் மேம்போக்கான புறக்கணிப்புகளையும் பார்க்கிறேன். நல்லது. ஒரு படைப்பிற்கு பல்வேறு விதமான அபிப்ராயங்களைச் சொல்வது அவரவர்களின் உரிமை. நான் மறுக்கவேயில்லை. அவர்களை குறையும் சொல்லவில்லை.

ஆனால் – சூப்பர் டீலக்ஸ் நிச்சயம் ஒரு காவியத் திரைப்படமல்ல. ஆனால் அதையே இத்தனை கொண்டாடுகிறோம் என்றால் இத்தனை வருட தமிழ் சினிமா, அரிதான சில விதிவிலக்குகளைத் தவிர, அத்தனை கலை வறட்சியோடும் போலித்தனங்களோடும் இருந்திருக்கிறது என்று பொருள். அத்தனை மொண்ணையான குப்பைகளால் நிறைந்திருக்கிறது என்று அர்த்தம்.

சூப்பர் டீலக்ஸ் போன்ற போஸ்ட்மாடர்னிச திரைப்படங்கள் ஒரு புதிய போக்கை தமிழில் துவக்கி வைக்கின்றன. அவற்றின் முதல்வரிசை முயற்சிகள் இவை. நகர வேண்டிய தூரம் இன்னமும் அதிகம்.

இந்த திரைப்படத்தை ‘கற்பிதங்களின் மீதான பகடிப் போர்’ என்று ஒருவரியில் சொல்வேன். இதுகாறும் மனித குலம் உருவாக்கி வைத்திருக்கிற பல கற்பிதங்களை இந்தப் படம் உடைத்துப் போடுகிறது; புனிதங்களை எள்ளல் செய்கிறது; கலைத்து அடுக்குகிறது. இது பின்நவீனத்துவத்தின் அடிப்படையான அம்சம்.

இயன்றால் இது போன்ற முயற்சிகளை புரிந்து கொள்ள முயற்சியுங்கள். ஒன்றிற்கு பல முறை பாருங்கள். இந்த திரைப்படம் தொடர்பான விமர்சனங்களை, ஆய்வுக்கட்டுரைகளை வாசியுங்கள். அவை தரும் வெளிச்சத்தின் மூலம் ஏதேனும் அறிந்து கொள்ள முடியுமா என்று பாருங்கள். (நாங்க ஏண்டா நடுராத்திரில சுடுகாட்டுக்குப் போகணும்?” என்றாலும் சரிதான்)

ஆனால் பிரச்சினை என்னவெனில் இதைப் புரிந்து கொள்ள எவ்வித முயற்சியும் செய்யாமல் அதுவரை பழக்கப்பட்டுப் போன வெகுசன மூளையின் குறுகிய பார்வையை மட்டும் வைத்துக் கொண்டு ‘ஹேஹே…’ என்று கெக்கலித்து உங்கள் அறியாமையை நீங்களே அம்பலப்படுத்திக் கொள்ளாதீர்கள். ஏனெனில் நானும் ஒரு காலத்தில் இது போலவே சிரித்துக் கொண்டிருந்து பிறகு என் போதாமையை உணர்ந்தவன். அங்கிருந்து நகர முயற்சிப்பவன்.

போலவே இந்த திரைப்படத்தில் வெளிப்படும் சில வசனங்களை மட்டும் முற்போக்கு பாவனையில் முன்வைத்து ஒட்டுமொத்த திரைப்படத்தையும் கிழித்து தோரணம் கட்டாதீர்கள். ஒரு பாத்திரத்தின் தன்மை என்ன, அது ஏன் அப்படிப் பேசுகிறது, பின்னணி என்ன? என்று ஒட்டுமொத்த நோக்கில் வைத்து பார்க்க முயற்சி செய்யுங்கள்.

தியாகராஜன் குமாரராஜா எனக்கு மாமனோ மச்சானோ அல்ல. எனவே இந்தப் பதிவின் மூலம் சூப்பர் டீலக்ஸ் போன்ற திரைப்படங்களுக்கு வக்காலத்து வாங்கும் உத்தேசமும் கிடையாது.. இது போன்று உருவாகும் புதிய போக்குகளை துவக்கி வைக்கும் அனைத்து நன்முயற்சிகளையும் நேர்மறையான அணுகுமுறையில் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்கிற ஆதங்கத்தினாலேயே இதை எழுதுகிறேன்.

முகநூலில்... எழுத்தாளர், மற்றும் நடிகை சமந்தாவின் அகில உலக ரசிகர் மன்றத் தலைவர் சுரேஷ் கண்ணன்