சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள 'தர்பார்' திரைப்படம், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் கடந்த 16 ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக நடந்தது.

இதில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பட குழுவினர் என பலர் கலந்து கொண்டு ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை சிறப்பித்தனர்.

இதேபோல் மும்பையிலும் 'தர்பார்' பட டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சுனில் ஷெட்டி, ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ்சிவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், சுனில் ஷெட்டியை பாராட்டி அவரை கண் கலங்கி அழ வைத்துவிட்டார் தலைவர் சூப்பர் ஸ்டார். இதுகுறித்து சூப்பர் ஸ்டார் பேசுகையில், கடந்த நான்கு வருடங்களாக சுனில் ஷெட்டி எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து தற்போது 'தர்பார்' படத்தில் நடித்துள்ளார்.

இதற்கு முக்கிய காரணம், இவர் கடந்த நான்கு வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவருடைய அப்பாவை பார்த்துக் கொண்டார். தற்போது அவருடைய தந்தை உடல் நலம் தேறிய பிறகு திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். 

அவர் தன்னைப் பற்றி மிகவும் பெருமையாகப் பேசினார். ஆனால் உண்மையில் அவரும், மிகவும் எளிமையான மனிதர். குறிப்பாக ஒரு சண்டைக் காட்சியில் நடிக்கும் போது, அவர் தன்னை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டார் என சூப்பர் ஸ்டார் கூறும் போது, சுனில் ஷெட்டி கண்கலங்கியது அங்கு இருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.

தந்தைக்காக இவர் நான்கு வருடங்கள் நடிக்காமல் இருந்ததை அறிந்து ரசிகர்கள் பலர் இவரை பாராட்டி வருகிறார்கள்.