இயக்குனர் சுந்தர் சி அவருடைய கனவு படமான சங்கமித்ரா படத்தை இயக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். கதை, கதாநாயகன், தயாரிப்பு நிறுவனம் என அனைத்து பக்கங்களில் இருந்து இவருக்கு எந்த பிரச்னையும் வரவில்லை என்றாலும். இந்த கதைக்கு ஏற்ற போல் கதாநாயகி மட்டும் இன்னும் தேர்வாகவில்லை.

இவர் ஏற்கனவே கதாநாயகியாக தேர்வு செய்த ஸ்ருதிஹாசன் கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தை விட்டு விலகினார். அதனை தொடந்து நயன்தாராவிடமும், அனுஷ்காவிடமும் கால் ஷீட் கேட்டும் அது கிடைக்காமல் போனது.

இந்நிலையில் ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய படங்களில் நடித்த ஹன்சிகாவை நடிக்க வைக்க உள்ளதாக கூறப்பட்டது ஆனால் அதுவும் ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்டது. 

இதன்காரணமாக இந்த படத்தை இயக்குவதற்கு சிறு பிரேக் விட உள்ளதாகவும், மேலும் ஏற்கனவே இவர்  இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படமான கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முயற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த சிவா, விமல், ஓவியா ஆகியோர் நடிப்பார்கள் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து இயக்குனர் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.