அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘பிகில்’படத்தின் ஓவர் பட்ஜெட் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாகக் கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.

விஷாலை வைத்து சுந்தர்.சி.இயக்கியுள்ள ‘ஆக்‌ஷன்’படம் வரும் வெள்ளியன்று ரிலீஸாகவுள்ள நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சக இயக்குநர்கள் குறித்த தனது விமர்சங்களை வெளியிட்ட அவர் இன்று பிரபல இயக்குநர்களை வைத்துப் படம் இயக்குபவர்கள் தயாரிப்பாளர்கள் குறித்து எந்த அக்கறையும் எடுத்துக்கொள்ளாமல் ஹீரோக்களுக்கு ஜால்ரா அடிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள் என்றார்.

மேலும் பேசிய அவர்,’“பெரிய ஹீரோக்களைக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கும் புதிய இயக்குநர்கள் ஹீரோக்களை மகிழ்விக்கவும், அதிக அளவு செலவழிக்கவும், தயாரிப்பாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தவும் முயற்சிக்கிறார்கள். இப்போதெல்லாம் சினிமா குழப்பத்தில் உள்ளது. ஏனெனில் ஹீரோக்கள் தங்கள் இயக்குநர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதற்கு நன்றியுணர்வைக் காண்பிக்க இயக்குநர்கள் காட்சிகளில் தேவையே இல்லாமல் ஹீரோ பின்னாடி 2,000 எக்ஸ்ட்ரா ஆர்டிஸ்டுகளை நிற்க வைத்து பிரம்மாண்டத்தை காட்டுகிறார்கள்.

அந்த இயக்குநர்களும் நாள் முழுவதும் ஒரு ஷாட்டை மட்டும் பதிவு செய்வதன் மூலம் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கிறார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் தான் நஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். தயாரிப்பாளர்களின் செலவில் இயக்குநர்கள் ஹீரோவின் புகழைப் பாட, பாடல்களிலும் காட்சிகளிலும் பார்வையாளர்களை ஈர்க்க கதையே இல்லாமல் எடுத்து வருகிறார்கள். சில இயக்குநர்கள் பெரிய ஹீரோ படங்களை இயக்கும்போது ஹீரோக்களை திருப்திப்படுத்துவதில் காட்டும் அக்கறையை தயாரிப்பாளரின் தயாரிப்பு செலவில் காட்டுவதில்லை”என்று அதிரடியாகத் தாக்கினார் அவர்.

சுந்தர்.சி.யின் இக்கருத்துக்கள் அப்படியே அட்லிக்கு பொருந்திப் போவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்கள் அத்தனையும் பிகில் படம் சம்பந்தப்பட்டதே என்றும் வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.