சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘பராசக்தி’ படம் விஜயின் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோத இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியான நிலையில், ரிலீஸ் தேதி குறித்து இயக்குனர் சுதா கொங்காரா தெளிவுபடுத்தியுள்ளார். 

சிவகார்த்திகேயனின் 25-வது படம் ‘பராசக்தி’

‘அமரன்’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ திரைப்படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25-வது படமான ‘பராசக்தி’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ‘பராசக்தி’ திரைப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் ‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். அதர்வா முக்கிய கதாபாத்திரத்திலும், ரவி மோகன் வில்லனாகவும் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

‘பராசக்தி’ படப்பிடிப்புகள் பாதியில் நிற்க காரணம் என்ன?

ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வரும் நிலையில் படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனால் ‘பராசக்தி’ திரைப்படம் குறித்த குழப்பங்கள் நிலவி வருகிறது. இந்த நிலையில் படம் குறித்து பேசிய இயக்குனர் சுதா கொங்கரா, “படத்தில் 40 நாட்களுக்கான காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டி உள்ளது. சிவகார்த்திகேயன் ‘மதராஸி’ படப் படிப்பிற்காக இலங்கையில் இருக்கிறார். அவர் சென்னை திரும்பியதும் மீண்டும் ‘பராசக்தி’ படப்பிடிப்பை தொடங்குவோம்” எனக் கூறியுள்ளார்.

விஜயின் ஜனநாயகனுடன் ‘பராசக்தி’ படம் மோதுகிறதா?

மேலும் ‘பராசக்தி’ படம், விஜயின் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோதும் என நாங்கள் அறிவிக்கவில்லை. படத்தின் ரிலீஸ் முடிவை தயாரிப்பாளர்களே எடுப்பார்கள். தயாரிப்பாளர்கள் மீது இருக்கும் வழக்கு குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.