மும்பையில் படப்பிடிப்பில் இருந்த ரஜினி திடீரென சென்னை திரும்பியதுடன் முக்கிய நிர்வாகிகளை அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகிறார். சுமார் 2 மாத காலமாக இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. காவல்துறை அதிகாரியாக நடிக்கும் ரஜினி இரவு பகலாக இந்த படத்திற்காக உழைத்து வருகிறார். ரஜினி திரையுலக வரலாற்றில் தர்பார் தான் கடைசி படமாக இருக்கும் என்று பேசப்படுகிறது. 

தர்பார் படம் வெளியான பிறகு ரஜினி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தர்பார் படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று இரவு பகலாக மெனக்கெட்டு வருகிறார். அதனால் தான் கடந்த வாரம் நடிகர் சங்க தேர்தலுக்கு வாக்களிக்க கூட வராமல் மும்பையில் படப்பிடிப்பில் இருந்தார் ரஜினி. ஆனால் நேற்று இரவு திடீரென ரஜினி சென்னை திரும்பியுள்ளார். 

ஆனால் மும்பையில் தர்பார் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஜினிக்கான காட்சிகள் இரண்டு நாட்கள் இல்லை என்று படக்குழு தரப்பில் சொல்லப்படுகிறது. இதனால் ரஜினி அவசரமாக சென்னை புறப்பட்டு வந்துள்ளார். ஓய்வு எடுக்கவே அவர் சென்னை திரும்பியதாக சொல்லப்பட்டாலும் ரஜினி சென்னை திரும்பும் தகவல் மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளுக்கு நேற்று மாலையே சொல்லப்பட்டுள்ளது. 

மேலும் ஞாயிறன்று போயஸ் கார்டன் இல்லத்திற்கு வருமாறு சில முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஜினி இப்படி திடீரென சென்னை திரும்பியதுடன் அரசியல் கட்சி நிர்வாகிகளையும் ஏன் அழைத்துள்ளார் என்று குழப்பம் நீடிக்கிறது. ஆனால் ஜனவரி வாக்கில் அரசியல் கட்சி வேலைகளை தொடங்க உள்ளதாகவும் இது குறித்து பேசவே அவர்களை அழைத்துள்தாகவும் சொல்கிறார்கள்.

மேலும் மும்பை புறப்பட்டுச் சென்ற போது செய்தியாளர்களிடம் பேசும் போது ரஜினி மிகுந்த டென்சனில் இருந்தது போல் இருந்தது. ஆனால் சென்னை திரும்பிய போது அவரிடம் உற்சாகம் காணப்பட்டது. இதனால் ரஜினி ஏதோ ஒரு திட்டத்துடன் தான் அவசரமாக சென்னை திரும்பியுள்ளதாக சொல்கிறார்கள்.