தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய 'அர்ஜுன் ரெட்டி' படம், தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தின் மூலம்,  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் விக்ரம் மகன் துருவ்  கதாநாயகனாக அறிமுகமாகினார். 

இந்த படத்தை 'வர்மா' என்ற பெயரில் இயக்குனர் பாலா இயக்கினார். வரும் காதலர் தினம் அன்று வெளியாவதாக கூறப்பட்ட இந்த படத்தின் அணைத்து பணிகளும் முடிவடைந்து, சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் திடீர் என படத்தை முழுமையாக பார்த்த தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் பாலா திருப்தியாக எடுக்கவில்லை என்று கூறி  முழு படத்தையும் கைவிட்டதாக அறிவித்தது.

மீண்டும் துருவ்வை கதாநாயகனாக வைத்து, புதிய இயக்குனர் மூலம் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.  இதனால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

 இந்த சம்பவம் குறித்து  இயக்குனர் பாலா," வெளியிட்ட அறிக்கையில் படைப்பு சுதந்திரம் கருதி,  படத்தில் இருந்து விலகுவது நான் மட்டுமே எடுத்த முடிவு என்று கூறினார்".  

மேலும் ' அர்ஜுன் ரெட்டி' படத்தின்  ஒரிஜினல் கதையில் சில மாற்றங்கள் செய்ததாகவும், அதை தயாரிப்பு நிறுவனம் ஏற்காமல் முழு படத்தையும் கை விட்டதாகவும் கூறப்படுகிறது.  புதிய படத்தை இயக்க இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் பேசி வருவதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அதே போல் ஏற்கனவே வர்மா படத்தில் கதாநாயகியாக நடித்த மேகா சௌத்திரியை மாற்ற படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  அவருக்கு பதிலாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கதாநாயகியாக நடிக்க வைக்க பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.