கண் சிமிட்டி அழகி பிரியா வாரியர் நடித்திருக்கும் முதல் இந்திப்படமான ‘ஸ்ரீதேவி பங்களா’ அவருக்குப் போதும் போதும் என்கிற அளவுக்கு விளம்பரத்தைக் கொடுத்திருக்கும் நிலையில் சில தர்மசங்கடங்களையும் சந்தித்து வருகிறார்.

‘ஸ்ரீதேவி பங்களா’ படத்தின் ட்ரெயிலர் ரிலீஸான தினத்திலிருந்தே அப்படம் நடிகை ஸ்ரீதேவியின் சொந்த வாழ்க்கை அம்சங்களைக் கொண்டதாகவே தெரிகிறது என்று பாலிவுட் முழுக்க பரபரப்பானது. ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரும் ட்ரெயிலரைப் பார்த்த உடனே இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில் நேற்று மும்பையில் நடந்த விருதுவிழா ஒன்றில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும், நடிகை பிரியா வாரியரும் கலந்துகொண்டனர். முதலில் பிரியா வாரியரை மொய்த்துக்கொண்ட நிருபர்கள் ‘நீங்கள் ஏற்றிருப்பது நடிகை ஸ்ரீதேவியின் வேடமா? என்று கேட்க, ‘இயக்குநர் சொன்ன காட்சிகளில் நடித்தேன். ஆனால் அது ஸ்ரீதேவியின் கதையா இல்லையா என்பது எனக்குத் தெரியாது’ என்று தர்மசங்கடத்தில் நெளிந்தார்.

இதே நிகழ்ச்சியில் மேடையேறியிருந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை நோக்கி நிருபர் ‘ஸ்ரீதேவி பங்களா’ படம் குறித்து என்ன சொல்லவிரும்புகிறீர்கள்? என்று கேட்க, அக்கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாமல் ஜான்வி முழிக்க, உடனே அவரது மேனேஜர் வேகமாக மேடையேறிச்சென்று ஜான்வியின் கையைப் பிடித்து இழுத்து நிகழ்ச்சியிலிருந்தே வெளிநடப்பு செய்யவைத்தார். இச்சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பாகியுள்ளது.