பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கடந்த 14ம் தேதி முதலே கவலைக்கிடமானது.  இதையடுத்து  எஸ்.பி.பி. நலம் பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமென ஆகஸ்ட் 20 ஆம் திரையுலகினர், இசைப்பிரியர்கள், ரசிகர்கள், சாமானிய மக்கள் என லட்சக்கணக்கானோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

அதன் பலனாக கடந்த சில நாட்களாகவே எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து நல்ல தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. இன்று வெளியிட்ட அறிக்கையில் கூட, எஸ்.பி.பி உடல் நிலை சீராக உள்ளதாகவும், அவருக்கு தொடர்ந்து, சுவாச கருவி மற்றும் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவர்கள் கூறுவதை அவர் புரிந்து கொள்வதாகவும், சிறப்பு மருத்துவர்கள் குழு அவரை கண்காணித்து வருவதாகவும் கூறியிருந்தது. 

 

இந்நிலையில் இன்று எஸ்.பி.பி.சரண் அப்பாவின் உடல் நிலை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அப்பாவின் நுரையீரலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாடலுக்கு கால் அசைக்கிறார். எழுதவும் பாடவும் முயற்சி செய்தார். 2 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குக்குள் உடல் நிலை முழுவதுமாக குணமடையும் என்று எதிர்பார்க்கிறோம் என மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.