பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென எஸ்.பி.பி.யின் உடல் நிலை மோசமடைந்தது. தனது குரலால் மக்களை மகிழ்வித்த இசை அரசன் எஸ்.பி.பி. பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென ஆகஸ்ட் 20ம் தேதி அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்தனை நடத்தினர்.

அதன் பின்னர் எடுக்கப்பட்ட பரிசோதனையில் எஸ்.பி.பி.க்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என வந்ததாக அவருடைய மகன் எஸ்.பி.பி.சரண் மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். இதையடுத்து மயக்க நிலையிலிருந்து மீண்ட எஸ்.பி.பி.க்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலையும் நல்ல நிலைக்கு முன்னேறி வந்தது. 

இந்நிலையில் நேற்று முதல் எஸ்.பி.பி-யின் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடமான நிலைக்கு சென்றுள்ளது. இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் நடிகர் கமல் ஹாசன் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் எஸ்.பி.பியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். தற்போது எஸ்.பி.பி.சரணுடன் மருத்துவர்கள் அடுத்தகட்ட சிகிச்சை குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். மருத்துவமனைக்கு எஸ்.பி.பி.யின் மனைவி, மகள் மற்றும் இயக்குநர் பாரதிராஜா, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் வந்துள்ளனர். 

 

இதையும் படிங்க: ஆபத்தான நிலையில் எஸ்.பி.பி... மகனுடன் அவசர ஆலோசனையில் மருத்துவர்கள்... தற்போதைய நிலவரம் என்ன??

மேலும் இளையராஜா உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் மருத்துவமனைக்கு வரலாம் என்பதாலும், எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து அறிய ரசிகர்கள் பட்டாளம் குவிந்து வருவதாலும் மருத்துவமனையை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சூளைமேட்டில் உள்ள MGM மருத்துவமனை வளாகம் உள்ளேயும், வெளியிலும் ஆயுதப்படை காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடுதல் காவல் ஆணையர் அருண் எம்ஜிஎம் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். வெளியில் குவிக்கப்பட்டுள்ள காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருவது பதற்றை உருவாக்கியுள்ளது.