கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. வெளிநாட்டு மருத்துவர்களிடம் காணொலி காட்சி மூலம் ஆலோசனைகள் பெற்று தொடர்ந்து 51 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 24 மணி நேரமாக அவருடைய உடல் நிலை மோசமடைந்தது. 

இதனால் எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக திரைத்துறை பிரபலங்கள் பலரும் மருத்துவமனையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.எஸ்.பி.பி.யின் மனைவி சாந்தி, மகன் எஸ்.பி.பி.சரண், மகள் பல்லவி மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் உள்ளனர். எஸ்.பி.பி.க்கு அடுத்தகட்டமாக என்ன மாதிரியான சிகிச்சைகள் கொடுக்கலாம் என மருத்துவர்களும் தீவிர ஆலோசனை நடத்தினர். அந்த சிகிச்சை முறைகள் குறித்து மகன் சரணிடமும் விளக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.  

சற்று நேரத்திற்கு முன்பாக மருத்துவமனைக்கு வந்த பாரதிராஜா, வெங்கட்பிரபு ஆகியோர் அவருடைய உடல் நிலை குறித்து குடும்பத்தார் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாரதிராஜா, சில சூழ்நிலைகளில் எனக்கு வார்த்தைகள் வராது. நான் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவன், மிகப்பெரிய கலைஞன் என்பதையும் தாண்டி எஸ்.பி.பி. என்னுடைய 40 ஆண்டு கால நண்பன். என்னால் இந்த துக்கத்தை எந்த விதத்தில் பகிர்ந்து கொள்வது என தெரியவில்லை. உலக மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பிரார்த்தனை செய்தோம், எழுந்து வருவார் என எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை. நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கு, அதனுடைய சக்தி தான் எல்லாம். இயற்கைக்கு முன்பு நாம் எல்லாம் ஒன்றுமே இல்லை. இன்னமும் எனக்கு சிறிது நம்பிக்கை உள்ளது. அந்த அற்புதமான கலைஞன், மனிதன் திரும்பி வருவான் என நினைக்கிறேன் என கூறும் போதே பாரதிராஜா கண்ணீர் விட ஆரம்பித்தார். அதனால் பேட்டியை பாதியிலேயே முடித்துக்கொண்டு திரும்பினார்.

இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு எஸ்.பி.பி.யை உடல் நிலை குறித்து அறிந்து கொள்ள மருத்துவமனை சென்று திரும்பிய இயக்குநர் வெங்கட் பிரபு அவர் உயிர் பிரிந்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். சரியாக இன்று மதியம் 1.04 மணிக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் நம்மை விட்டு பிரிந்ததாக வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் மருத்துவமனை தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.