தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 16 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி, உலக அளவில் மிகவும் பிரபலமானவர், எஸ்.பி.பி.பாலசுப்ரமணியம்.  இவருக்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 14-ந்தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமானது. அவரது உடல்நிலையை தீவிர சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.  

 

 

இதையடுத்து எஸ்.பி.பி. விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென திரைத்துறை பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.  மேலும், தன்னுடைய ரசிகர்களுக்காக நேற்று முன்தினம் எஸ்.பி.பி ஐ.சி.யூவில் இருந்தபடி, தம்ஸ்அப் காட்டியபடி புகைப்படம் வெளியிட்டிருந்தார். இதில் அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

இந்நிலையில் நேற்று வெளியான அறிக்கையில், இதில் இவருடைய உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும், தொடர்ந்து ஐ.சி.யூவில், செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலுக்கு பின்னரே ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அனைவரது பிரார்த்தனையும் வீண்போகாது, நிச்சயம் எஸ்.பி.பி நலமுடன் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை பிறந்தது.  

 

 

இன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளார். அவர் அவ்வப்போது கண் விழிந்து பார்க்கிறார். நுரையீரல் தொற்றுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்களும், திரைத்துறையினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.