நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் சால்வே அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2 ஆம் தேதி எண்ணப்பட்டு தேர்வு முடிகள் அறிவிக்கப்பட்டது. இதில் தி.முக கட்சி பெரும்பான்மையோடு தமிழகத்தில் ஆட்சியமைக்க உள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, பிரபலங்கள், அரசியல் வாதிகள், பொதுமக்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

குறிப்பாக சிலர் நேரடியாக சென்று விரைவில் முதல்வராக பொறுப்பேற்க உள்ள, ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது...  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி இராமநாராயணன், கெளரவ செயலாளர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன்- டி. மன்னன், துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ். பொருளாளர் எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகிய 6 பேர் முதல்வர் பதவி ஏற்கும் தளபதியை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடத்தில் இருந்து, மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர் திரையுலகினர். மேலும் மறைத்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கலை துறையினருக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ள நிலையில், ஸ்டாலின் ஆட்சியிலும் இதே போன்ற உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதே திரையுலகை சேர்ந்தவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.