பொது மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து தனது மகனுடன் கொண்டாட்டக் குளியல் நடத்திய புகைப்படங்களை ட்விட்டர் வலைதளத்திலிருந்து நீக்கி அதற்கு பொறுப்பான விளக்கமும் அளித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா.

வலைதள நடவடிக்கைகளில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சவுந்தர்யா அடிக்கடி தனது மகன் வேத் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு அது தொடர்பான குறிப்புகளையும் வெளியிடுவார். சமீபத்தில் அப்படியே அச்சு அசலாக ரஜினி போலவே வேத் கொடுத்த போஸ் ஒன்று வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் நேற்று தனது மகன் வேத்துடன் சவுந்தர்யா நீச்சல் குளம் ஒன்றில் குளிக்கும் காட்சியை பதிவிட்டு, இளம் வயது முதல் உடற்பயிற்சி மிக அவசியம் என்று குறிப்பு போட்டிருந்தார். அதை பாசிடிவாக எடுத்துக்கொள்ளாத அவரது ஃபாலோயர்கள் ‘ஒட்டுமொத்த சென்னையும் தண்ணீர் இல்லாம தத்தளிக்கும்போது இப்படி ஒரு ஆடம்பரக் குளியல் தேவையா?’ என்கிற தொனியிலேயே கமெண்டுகள் போட்டிருந்தனர்.

இப்படி ஒரு ரியாக்‌ஷனை சற்றும் எதிர்பாராத சவுந்தர்யா உடனே அந்த நீச்சல் குளப் படங்களை டெலிட் செய்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தும் ஒரு பதிவு போட்டார். அதில்,...’எனது டிராவல் டைரியில் நல்ல எண்ணத்தோடு போட்ட பதிவை சுற்றுச் சூழலை புரிந்துகொண்டு நீக்கிவிட்டேன்’என்று விளக்கம் அளித்திருக்கிறார்.