தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் வந்தாலும், அவ்வளவு எளிதில் அனைவராலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட முடிவது இல்லை. ஆனால், மிக குறுகிய காலத்தில் வளர்ந்த காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூரி. 

பல்வேறு கஷ்டங்களை தாண்டி சினிமாவில் நுழைந்து தன்னுடைய காமெடியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ள இவர், கடந்த 20 வருடங்களுக்கு முன், சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான 'கண்ணன் வருவான்' என்கிற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் கவுண்டமணியுடன் நடித்துள்ளார்.

தற்போது இதுகுறித்த வீடியோ ஒன்றை அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு தன்னுடைய நன்றிகளை, கவுண்டமணி, மற்றும் சுந்தர்.சி, ஆகியோருக்கு தெரிவித்துள்ளார்.

இந்த காட்சியில் சூரி... ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மிகவும் ஒல்லியாக உள்ளார். கவுண்டமணி நடந்து வரும் போது... ஐயா தெய்வமே என காலில் விழுகிறார். கவுண்டமணி அவரை தூக்கி விட்டு பணம் கொடுக்க. இதெல்லாம் வேண்டாம் நீங்கள் வந்ததே போதும் என சூரி செல்கிறார். இது தான் சூரி சினிமாவில் பேசிய முதல் வசனம் என கூறி, அந்த காட்சியையும் தற்போது அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அன்று பட வாய்ப்புகள் இல்லாமல், பல்வேறு சினிமா கம்பெனிகளுக்கு ஏறி இறங்கிய சூரி இன்று முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து வருகிறார். இவருக்கு கதையின் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் தொடர்ந்து காமெடி காட்சிகளில் மட்டுமே நடிக்க விரும்புவதாக கூறி, இவரை தேடி வந்த வாய்ப்புகளை தவிர்த்து விட்டார்.

சூரி பேசிய முதல் வசன காட்சி இதோ...