அருந்ததி படத்தில் அனுஷ்காவை வாட்டி வதைத்த சோனு சூட்டை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். திரையில் என்ன தான் வில்லனாக வலம் வந்தாலும் நிஜத்தில் ஹீரோ என்பதை நிரூபித்து காட்டிவிட்டார். கொரோனா லாக்டவுன் காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்தது முதல் நம்ம ஊர் மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்ப தனி விமானம் ஏற்படுத்திக் கொடுத்தது வரை கணக்கில்லாத உதவிகளை செய்தார். 

அதன் பிறகு தனது சோசியல் மீடியா பக்கங்களில் நாளுக்கு நாள் உதவி கேட்டு வருவோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி அடுத்தடுத்து உதவி கேட்போருக்கு கொடுப்பதற்காக தனது பெயரிலும், மனைவி சோனாலி பெயரிலும் உள்ள 2 கடைகள் 6 குடியிருப்புகள் என மொத்தம் 8 சொத்துக்களை 10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார். இப்படி மக்கள் சேவையில் தீவிரமாக இறங்கியுள்ளதால் சோனு சூட்டின் இமேஜ் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. 

அதனால் சினிமாவில் இனி வில்லன் வேடங்களில் நடிக்க மாட்டேன் என முடிவெடுத்துள்ளாராம். கொரோனாவிற்கு முன்னதாக வில்லன் கதாபாத்திரத்தில் கமிட்டான அல்லுடு அதுர்ஷ் என்ற தெலுங்கு படத்தில் கூட அவருடைய நெகட்டீவ் கதாபாத்திரத்தை முற்றிலும் மாற்றி, புதிய கேரக்டரை உருவாக்கியுள்ளார்களாம். இனிமேல் பாசிட்டிவான கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகப்படும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.