இன்று டாக்டர் ராதகிருஷ்ணனின் பிறந்தநாள். இன்றைய தினத்தை இந்தியா முழுவதும் மாணவ, மாணவிகள் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகின்றனர். ஆசிரியர் என்பவர் ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானவர். படிப்பு சொல்லிக்கொடுத்தவர் மட்டுமல்ல தங்களுக்கு கலைகளை சொல்லிக்கொடுப்பவரும் கூட ஆசிரியர் தான். 

அந்த வகையில் ஆசிரியர் தினமான இன்று இயக்குனர் அட்லீ தன் ஆசிரியருக்கு டிவிட்டரில் வாழ்த்து கூறி இருக்கிறார். விஜயுடன் இவர் செய்த மெர்சல் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இப்போது தளபதி 63 படத்தை இயக்க இருக்கிறார் அட்லீ. மீண்டும் விஜயை வைத்து இவர் இயக்கபோகும் இந்த தளபதி 63 படத்திற்கான வேலைகளில் பிஸியாக இருக்கும் இவர் , தனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை இயக்குனர் சங்கருக்கு தான் தெரிவித்திருக்கிறார்.

இன்று தமிழ் சினிமாத்துறையில் மாஸ் இயக்குனராக இருக்கும் அட்லீ, இயக்குனர் சங்கரிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இதனால் திரையுலகில் தனக்கு ஆசானான சங்கருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார் அட்லீ. பொதுவாக அட்லீ விஷயத்தில் மக்களுக்கு ஒரு கருத்து உண்டு. பல பிரம்மாண்டமான வெற்றி பெற்ற உலகத்திரைப்படங்களில் எல்லாம் இருந்து காட்சிகளை காப்பி அடித்து , அந்த காட்சிகளை எல்லாம் அவர் தன் திரைப்படத்தில் உபயோகித்திருப்பார் என்பது தான் அந்த கருத்து.

அந்த காப்பி அடிக்கும் பழக்கம் இப்போது ஆசிரியர் தின வாழ்த்திலும் கூட தொடர்ந்திருக்கிறது.” ஆசிரியர் தினம் ஆண்டுக்கு ஒரு முறை வந்தாலும், நீங்கள் கற்று தந்த விஷயங்கள் என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் எனக்கு கைகொடுக்கிறது. அதற்காக  நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டவன்” என அந்த பதிவில் அட்லீ தெரிவித்திருக்கிறார்.

அவரின் பதிவைப் படித்த பலரும் அட்லீ எவ்வளவு அருமையாக வாழ்த்து கூறி இருக்கிறார், என பெருமைப்பட்ட போது தான் தெரிந்திருக்கிறது அட்லீயின் இந்த வாழ்த்து இணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட வாக்கியம் என்று. இதனால் நொந்து போயிருக்கின்றனர் அட்லீ ரசிகர்கள். மேலும் அட்லீயின் காப்பி அடிக்கும் இந்த வேலையை மீம்ஸ் கிரியேட்டர்கள் வேறு ஒரு பக்கம் கலாய்த்திருக்கின்றனர். 

அட்லீ இப்படி வாழ்த்து சொன்னது தப்பில்லை. ஆனால் ஒரு மிகப்பெரிய இயக்குனர் சொந்தமாக நாலு வரியில் வாழ்த்து சொல்லி இருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பதே இதற்கெல்லாம் காரணம். அதிலும் பிரம்மாண்ட இயக்குனர் சங்கருக்காக சொந்தமாக வாழ்த்து எழுதி இருக்கலாம்