எவ்வளவுதான் நல்ல காரியங்கள் செய்தாலும் சிறிய சர்ச்சைகளில் மாட்டினாலே நடிகர்களை வறுத்தெடுப்பதற்கு ஒரு கூட்டம் எப்போதும் காத்துக்கொண்டேயிருக்கிறது. அவ்வகையில் இரண்டாவது முறையாக மாபெரும் சர்ச்சை ஒன்றில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. இதையொட்டி இன்னும் மூன்று தினங்களில் அவரது அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக ஒரு அமைப்பு மிரட்டி வருகிறது.

புயல்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பெரிய அளவில் சாதனை படைக்கும் ஏழைகளுக்கு எப்போதுமே ஓடோடி உதவி வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் முத்தையா முரளிதரனின் பயோபிக்கில் நடிக்கவிருப்பதாக ஒரு சர்ச்சையில் மாட்டி அப்படத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தார். அந்த சர்ச்சை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், புதியதொரு சர்ச்சையில் மாட்டியுள்ளார். பொதுவாகவே விளம்பரங்களில் நடிக்க விரும்பாத அவர், பொதுமக்களை ஆன்லைனில் மளிகைப் பொருள்களை வாங்க வைக்கும் ‘ஆப்’பான ‘மாண்டி’ (Maandee) யின் விளம்பர மாடலாகி அதன் விளம்பரத்தில் ஆன்லைன் மளிகைப் பொருள்களை வாங்கச் சொல்கிறார்.

சமீப காலமாகவே இதுபோன்ற ஆன்லைன் வணிகத்தால் சிறு குறு வியாபாரிகள் நலிவடைந்து வரும் நிலையில் இப்படி முன்னணி ஹீரோவான இவர் ஆன்லைன் வணிகத்துக்கு ஆதரவு தருவது தவறு என்று அவருக்கு எதிர்ப்பு ஆரம்பித்து வலுத்து வருகிறது.“அவரது படங்களை ஆன்லைனில் பார்த்தால் அவர் பொறுத்துக் கொள்வாரா..?” என்று அவரை எதிர்ப்பவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்..!இதற்கிடையில் வரும் 4ம்தேதி திங்கள்கிழமை காலை விஜய் சேதுபதியின் விருகம்பாக்கம் அலுவகத்தை முற்றுகையிட வணிகப் போராளி கொளத்தூர் த.ரவி தலைமையில் வியாபாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.