தமிழ் சினிமாவில் இரண்டு முன்னணி நடிகர்கள் இணைந்து நடிப்பது புதிதல்ல. அதிலும் சமீக காலமாக மல்டி ஸ்டார் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில், நடிகர் சித்தார்த் மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் இணைந்து, முதல் முறையாக நடித்து வரும் திரைப்படம்.  'சிவப்பு மஞ்சள் பச்சை'.  இந்த படத்தை 'பிச்சைக்காரன்' படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் சசி இயக்கி வருகிறார்.

இப்படத்தில் சித்தார்த் போக்குவரத்து காவலர் ஆக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் ஸ்ட்ரீட் ரேஸராக நடிக்கிறார். சமூக கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் மலையாள நடிகை லிஜோ மோல் மற்றும் காஷ்மிரா என்கிற இரண்டு புதுமுக நடிகைகள் தமிழில் அறிமுகமாக உள்ளனர்.  

இந்நிலையில் 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படம் ஏற்கனவே சென்சாருக்கு அனுப்பப்பட்டு 'யு' சர்டிபிகேட் பெற்றுள்ள நிலையில். இந்த படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.