பிரபலங்கள் என்றாலே அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது அனைவருக்கும் அலாதி பிரியம்தான். அதுவும் சினிமா பிரபலங்கள் என்றால், சொல்லவே வேண்டாம். முண்டியடித்து எப்படியாவது அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு பெருமை பேசுவார்கள். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால், தாங்கள் வைத்துள்ள செல்போன் மூலமாகவே செல்ஃபி எடுத்துக் கொள்வது ட்ரண்டாக உள்ளது. இதனை தவிர்க்க இயலாமல் பிரபலங்களும், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதும், சிலர் நாசுக்காக தவிர்க்கும் சம்பவங்களையும் நாம் பார்த்து வருகிறோம்.

ஆனால் நெற்று நடந்த கடை திறப்பு விழாவின்போது, ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது, யாரும் எதிர்பாராத வகையில் அவரது செல்போனை தட்டி விட்ட சம்பவம் நடந்துள்ளது. இதற்கு காரணமானவர் நடிகர் சிவக்குமார்தான். அந்த ரசிகரோ, சிவகுமாருக்கு எந்த தொந்தரவும் அளிக்காமல் புகைப்படம் எடுக்க முயற்சித்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அதனை சிவக்குமார் தட்டி விட்டது பெரும் அதிர்ச்சியாகவே இருக்கிறது.

சொற்பொழிவாளர், ஓவியர், கவிஞர் என தன்னை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் சிவக்குமார் இப்படி நடந்து கொண்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடை திறப்புக்கு வந்த அவர், இளைஞரின் செல்போனை தட்டிவிட்டு முகத்தை கடுகடுப்பாக வைத்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தைப் பார்ப்பவர்கள் சிவக்குமாரா இப்படி? என்று கேள்வி எழுப்புகின்றனர்.