தமிழில் நயன்தாரா போன்ற ஒரு சில விதிவிலக்குகள் தவிர்த்து நடிகைகளுக்கு என்று ஒரு வியாபாரம் எந்தக் காலத்திலும் இருப்பதில்லை. இந்நிலையில் ஒரு சில படங்களிலேயே முத்திரை பதித்துள்ள நடிகை ஐஸ்வர்யாவை முழுமையாக நம்பி பெரும்பொருட்செலவில் சிவகார்த்திகேயன் தயாரித்து வெளியிட்ட படம் ‘கனா’.

இதில் ஐஸ்வர்யாவின் அப்பாவாக நடிகர் சத்யராஜும், கிரிக்கெட் கோச்சாக ஒரு கவுரவ வேடத்தில் சிவகார்த்திகேயனும் நடித்திருந்தாலும் இது முழுக்க முழுக்க ஐஸ்வர்யாவை நம்பி எடுக்கப்பட்ட படமே. சிவகார்த்திகேயன் தேவையில்லாம ரிஸ்க் எடுக்கிறார். இதுவரைக்கும் சம்பாதிச்ச பணத்தையெல்லாம் இந்தப் படத்துல விடப்போறார்’ என்ற எச்சரிக்கைகளையும் மீறி அவர் தயாரித்து வெளியிட்ட அப்படம் பாக்ஸ் ஆபிசில் செம ஹிட் அடித்திருக்கிறது.

அந்த மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளும் வகையில் சற்றுமுன்னர் ட்விட்டரில் ஒரு செய்தி வெளியிட்ட சிவகார்த்திகேயன்...எங்கள் ‘கனா’ குழுவின் கனவை நனவாக்கிய உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி. எங்கள் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து தியேட்டரை நோக்கி படையெடுத்த உங்களுக்கு நன்றி. எங்கள் ‘கனா பார்த்து சிரித்து, கண்ணீர் விட்டு, கைதட்டல்கள் வழங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி’ என்று மிகவும் நெகிழ்ச்சியாக மகிழ்ச்சியாக பதிவிட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.