நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'அயலான்' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, இன்று நடைபெற்ற நிலையில், இதில் பேசிய சிவகார்த்திகேயன் இந்த படத்துடன் வெளியாகும் மற்ற படங்களுக்கும் வாழ்த்து கூறியுள்ளார். 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2017-ஆம் ஆண்டு பூஜை போடப்பட்டு துவங்கப்பட்ட 'அயலான்' திரைப்படம், ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், பல வருட போராட்டத்திற்கு பின்னர் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, தற்போது மிக பிரம்மாண்டமாக இன்று சென்னை தாஜ் கோரமெண்டல் ஹோட்டலில் நடந்தது.

குறிப்பிட்ட ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், 'அயலான்' படக்குழுவை சேர்ந்த, இயக்குனர் ஆர் ரவிக்குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தொழில்நுட்ப கலைஞர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதே போல் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா மற்றும் மகன் குகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Scroll to load tweet…

ஆடியோ லாஞ்சில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், பொங்கல் ரேஸில் உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'லால் சலாம்', தனுஷின் 'கேப்டன் மில்லர்' ஆகிய படங்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். என்னோட படம் ஓடணும்... உன்னோட படம் ஓடணும் என்பது இல்லாமல் எல்லா படங்களும் நன்றாக ஓடி தும்சம் செய்ய வேண்டும் என... தாராள மனப்பான்மையுடன் சிவகார்த்தியேன் கூற, ரசிகர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர்... இஷா கோபிகர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, கருணாகரன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.