ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஆனால் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி படத்திற்கு பிறகு சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட படங்கள் வரவில்லை. அந்த குறையை தீர்ப்பதற்காக களம் இறங்கிய சிவகார்த்திகேயன், பேட்மேன் போன்ற கெட்டப்பில் ஹீரோ படத்தில் நடித்துள்ளார். பி.எஸ்.மித்ரன் இயக்கும் அந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும் அர்ஜுன், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படம் நிறைவடைந்த நிலையில், தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

கலைப்புலி தாணுவிற்கு பிறகு புரோமோஷனில் பெயர் போனது சன் பிக்சர்ஸ். எப்படிப்பட்ட படத்தையும் பட்டி, தொட்டி வரை கொண்டு சேர்ப்பதில் கில்லாடியான நிறுவனம். ஆனால் ஹீரோ படத்தின் கதையோ வேறு, புரோமோஷனில் சன்பிக்சர்ஸையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தீவிரம் காட்டி வருகிறது. சத்யம் தியேட்டர் முன்பு வான் உயர்ந்த கட்அவுட், ஹீரோ கேம் என அடுத்தடுத்து அதிரடி காட்டி வருகிறது. 

இதனிடையே, பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் பாணியில் ரயில் முழுவதும் ஹீரோ படத்தின் விதவிதமான போஸ்டர்களை ஒட்டி புரோமோஷன் செய்யப்பட்டுள்ளது. இதைப் பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வாய்பிளந்து நிற்கின்றனர். அடுத்த விளம்பரம் பேனரில் தான் என ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்தப் படம் வரும் 20ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.