ஒரு காலத்தில் அனைவருக்கும் செல்போன் மோகம் இருந்தது, ஆனால் அது இப்போது செல்ஃபி மோகமாக மாறி பலரை ஆட்டுவித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் பலர் சமூக வலைதளங்களில் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட வேண்டும் என, உயிருக்கே உலை வைக்க கூடிய விதமாக ஆபத்தை இடங்களுக்கு சென்று புகைப்படங்களை எடுத்து, பதிவிட்டு லைக்குகளை பெறுகின்றனர்.

ஆனால் இப்படி செய்ய கூடாது என சமூக அக்கறை கொண்ட சில பிரபலங்கள், கூறிவந்தாலும் அதனை அவர்கள் பின் பற்றுகிறார்களா என்றால் அது சந்தேகம் தான்.

அந்த வகையில் தான் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்துள்ள செல்ஃபி புகைப்படம் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.

நடிகர் விஷாலை வைத்து,  'இரும்புத்திரை' படத்தை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்கத்தில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் 'ஹீரோ'. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் , மற்றும் மற்றொரு நாயகியாக 'நாச்சியார்' படத்தில் ஜிவி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த இவனா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் மித்ரன், மின்சார ரயிலின் கம்பியை பிடித்து தொங்கியபடி, நடிகர் சிவகார்த்திகேயனுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு முதல் முறையாக மின்சார ரயிலில் படப்பிடிப்பு நடத்துகிறோம் என கூறியிருந்தார். 

இதை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஏன் இந்த விபரீத செல்ஃபி என படக்குழுவிடம் கேள்வி எழுப்பி வருவதோடு, நெட்டிசன்கள் சிலர், சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை கூறி வரும் சிவகார்த்திகேயன் இப்படி செய்யலாமா என கேட்டு வருகிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்வார் சிவா என பொறுத்திருந்து பார்ப்போம்.