சிவகார்த்திகேயன் மித்ரன் இயக்கிவரும் ‘ஹீரோ’படத்தின் தலைப்பைப் பயன்படுத்த தடை கோரி அப்பட நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் சிவகார்த்திகேயன் தரப்புக்கு எதிராக உள்ளதால் தலைப்பை மாற்றவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது சிவகார்த்திகேயன் படக்குழு.

இது தொடர்பாக தயாரிப்பாளர் மணிகண்டன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,“நான் ட்ரைபல் ஆர்ட்ஸ்  நிறுவனம் சார்பாக தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன் (Mem No: 3812). எனது நிறுவனத்தின் பெயரில் கடந்த 04.07.2017- அன்று ’ஹீரோ’ என்ற படத்தலைப்பினை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து, முறையாக புதுப்பித்து 03.06.2020-ம் ஆண்டு வரை உரிமம் பெற்றுள்ளேன் (Title Ref No : 7123) .

“ஹீரோ” என்ற எங்களது தலைப்பில் ஆனந்த் அண்ணாமலையின் எழுத்து – இயக்கத்தில் , விஜய் தேவரகொண்டா மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பான செய்திகள் பத்திரிக்கை, தொலைக்காட்சி, மற்றும் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.

இந்த சூழ்நிலையில் சில மாதங்களாக தமிழ் மொழியில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் ’ஹீரோ’என்ற தலைப்பில் வேறொரு கதாநாயகனை வைத்து படம் தயாரிப்பதாக பத்திரிக்கை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மற்றும் அனைத்து ஊடகங்களிலும் செய்திகளை வெளியிட்டு வந்தனர்.இதனை கண்டு தயாரிப்பாளர் சங்கத்தை நாங்கள் அணுகிய போது, அவர்கள் கடந்த 16 ஏப்ரல் 2019 அன்று எங்களது தலைப்பினை பயன்படுத்திவரும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு இப்படத்தின் தலைப்பினை பயன்படுத்தக் கூடாது என்று கெளரவ செயலாளர் திரு. எஸ். எஸ். துரைராஜ் கையொப்பமிட்ட கடிதத்தை அனுப்பி வைத்து, கடிதத்தின் நகலையும் எங்களுக்கு கொடுத்து உறுதி அளித்தார்கள்.

ஆனால் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம், தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை மீறி (02.09.2019) அன்று பத்திரிக்கை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மற்றும் அனைத்து ஊடகங்களிலும் ’ஹீரோ’ என்ற தலைப்பில் போஸ்டர்களை வெளியிட்டனர்.ஆகவே இந்த  கடிதத்தின் வாயிலாக கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பதனை பத்திரிக்கை, தொலைக்காட்சி, மற்றும் அனைத்து ஊடகங்களுக்கும்   தெரிவித்துக்கொள்கிறோம்..!என்று குறிப்பிட்டுள்ளார். 

தொடர் தோல்விகளுக்குப் பின்னர் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’படத்தின் மூலம் லேசாக சமதளத்திற்கு வந்திருக்கும் சிவகார்த்திகேயன் இந்த திடீர் சிக்கலால் மனம் நொந்துபோயுள்ளார்.