'காக்கா முட்டை' படத்தை தொடர்ந்து, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'கனா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை காமெடி நடிகராக அறிமுகமாகி, பாடகர் மற்றும் பாடலாசிரியர் என ரசிகர்களால் அறியப்பட்ட அருண் ராஜா காமராஜ் இயக்குகிறார்.

இந்த படத்தை, நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் முக்கிய வேடத்தில் நடித்திருப்பது, இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

பெண் கிரிக்கெட் வீராங்கனையாக ஆசைப்படும் ஐஸ்வர்யா ராஜேஷின் கனவை நிறைவேற்ற போராடும், கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்த திரைப்படம் பெண்களை மையப்படுத்திய படம் என்று மட்டுமே சொல்ல முடியாது, என்றும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் திரைப்படம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.