'ஹீரோ' படத்தை தொடர்ந்து, ஃபைனான்ஸ் பிரச்னையால் 75 சதவீத படப்பிடிப்புடன்  நிற்கும், 'இன்று நேற்று நாளை' புகழ் இயக்குநர் ரவிக்குமாரின் 'ஏலியன்' படத்தில் சிவகார்த்தியேன் நடிப்பார் என கூறப்பட்டது. 

ஆனால், தயாரிப்பு தரப்பிற்கான பிரச்னை தீராததால், அடுத்து 'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கியவரும், அவரது நண்பருமான நெல்சன் இயக்கத்தில்தான் சிவகார்த்திகேயன்  நடிக்க வாய்ப்புள்ளதாகவும் எதிபார்க்கப்பட்டது.


இதனால், சிவகார்த்திகேயன் அடுத்து யார் இயக்கத்தில் எந்தப் படத்தில் நடிக்கவுள்ளார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது. 

இந்த வேளையில், அவரது அடுத்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் இந்த புதிய படத்துக்கு 'டாக்டர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்தது போன்றே, இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகிறார்.

 'கோலமாவு கோகிலா' படத்தை தொடர்ந்து நெல்சனின்  அடுத்த படைப்பாக உருவாகும் 'டாக்டர்' படத்துக்கு, 'ராக் ஸ்டார்' அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை, கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனே தனது எஸ்.கே. தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வெளியிடுகிறார். 'ஹீரோ' படத்தை தொடர்ந்து கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் இணையும் 2-வது படம் இது.

https://twitter.com/Siva_Kartikeyan/status/1201463609626222592
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வீடியோவுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன், விரைவில் 'டாக்டர்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆட்டம்போட வைத்துள்ளது. உடனடியாக, சமூக வலைதளத்தில் டாக்டர் என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி, சிவகார்த்திகேயன் - நெல்சன் கூட்டணி சேர்ந்திருக்கும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பை டிரெண்டிங் செய்து கொண்டாடி வருகின்றனர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.
ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரியே சிவகார்த்திகேயன் - நெல்சன் - அனிருத் என செம்மயான கூட்டணியுடன் உருவாகவுள்ள 'டாக்டர்' படம் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.