சிவகார்த்திகேயன் வளர்ச்சியில், தனது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘3’ படத்தின் மூலம்  முதல் புள்ளி வைத்தவர் நடிகர் தனுஷ். அதைப் பல மேடைகளில் சிவகார்த்திகேயன் சொல்லி வந்திருக்கிறார். ஆனால் வாழ்க்கையில் சில சூழல் வழுக்கைத் தலைபோல வழுக்கி விடுவதும் உண்டு அல்லவா? அப்படியொரு சூழல் தான் தற்போது.

இன்றைய மார்க்கெட்டில் பெரிய இடத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் பெரிய இடத்து மாப்பிள்ளையான தனுஷிடம் நேரடியாக தன் படம் மூலம் மோத இருப்பது உறுதியாகி இருக்கிறது. வரும் 21-ம் தேதி தான் தயாரித்த கனா வெளியாக வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்திடம் அனுமதி கேட்டிருந்தார்  சிவகார்த்திகேயன். சங்கமும் கேட்டைத் திறந்து விட்டது. 

இதற்கிடையில்  திடீரென சங்கத்தை அணுகாமலே ’மாரி2’ வை 21-ம் தேதி ரீலீஸ் செய்வதாக தனுஷ் அறிவித்து விட்டார். உடனே "கூட்றா பஞ்சாயத்தை" என பல தயாரிப்புத் தரப்புகள் வந்து சமரசத்திற்கு அமர்ந்தன. ஆனால் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. தன் படம் 21ம் தேதி ரீலீஸ் ஆகும்..ஆகணும் என்பதில் தனுஷ் உறுதியாக நிற்க, சங்கமும் துண்டை உதறிவிட்டது. வர்ற 21-ம் தேதியும் அடுத்து வரும் ஜனவரி 10-ம் தேதியும் யார் வேணாலும் எப்படி வேணாலும் படங்களை ரிலீஸ் பண்ணிக்கோங்கப்பா என சங்கம் சரண்டர் ஆகி இருக்கிறது. 

அதனால் நேற்றுவரை  ஒன்றாக இருந்து இன்று  துண்டாகிப் போன சிவகார்த்திகேயன், தனுஷ் இருவரும் தங்கள் படங்கள்  மூலமாக நேருக்கு நேர் மல்லுக்கட்ட இருக்கிறார்கள். "கனாவும் ரெண்டெழுத்து மாரியும் ரெண்டெழுத்து  எல்லாம் தலையெழுத்து" என கம்முன்னு இருக்கிறது வேடிக்கைப் பார்க்கிற ஒரு கூட்டம்.