தனது லேட்டஸ்ட் பாடலில் பெண்களுக்கு எதிராக ஆபாச வார்த்தைகளைப்  பயன்படுத்தியதாகக் கூறி, பிரபல பாடகர் ஹனி சிங் மீது  பஞ்சாப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிரபல பஞ்சாபி பாடகர், யோ யோ ஹனிசிங். இவர் இந்தி படங்களில் பின்னணி பாடியுள்ளார். சில படங்களில் நடித்தும் உள்ளார். வீடியோ ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். இத்தனைக்கும் மேலாக நமது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகர். இவர் சமீபத்தில் மக்னா (Makhna) என்ற வீடியோ ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார்.  ட்’சீரிஸ் இசை நிறுவனம் வெளியிட்டிருக்கும் இதில் பெண்களுக்கு எதிராக ஆபாசமான, அநாகரிகமான வார்த்தைகளை பாடல்களில் பயன்படுத்தி இருப் பதாகக் கூறப் படுகிறது.

இதையடுத்து பஞ்சாப் மாநில மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.அந்த ஆணையத் தலைவர் மனிஷா குலாடி கூறும்போது, மற்ற நாடுகளில் உள்ளவர்கள் கூட, ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்று கோஷம் போட்டுக்கொண்டி ருக்கிறார்கள். ஆனால், ஹனி சிங் அநாகரிகமான வார்த்தைகளை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். பாடல்களில் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை அவர் நிறுத்தாவிட்டால், அந்த வார்த்தைகளை அனுமதிக்கும் நாடுகளுக்குத் தான் அவர் செல்ல வேண்டும். இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் உள்ள காட்சிகளும் ஏற்புடைதாக இல்லை. மாநில அரசு அந்த பாடலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரி வித்தார்.

இதற்கிடையே இன்று பஞ்சாப் போலீஸ், இந்த புகார் தொடர்பாக ஹனி சிங் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த 22ம் தேதி யூடியுபில் வெளியிடப்பட்டுள்ள இந்த ‘மக்னா’ பாடலை இன்று வரை 5 கோடியே 60லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.