கடந்த வாரம் அவசரக்குடுக்கை செய்தியாளர்களால் ‘காலமானார்’என்று பரபரப்பு கிளப்பப்பட்ட மூத்த கலைஞர் பரவை முனியம்மா உடல்நலம் தேறி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். இச்செய்தியை அவரை உடனிருந்து அக்கறையுடன் கவனித்துக்கொண்ட நடிகர் அபி சரவணன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலம் குன்றிய நிலையில் மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரவை முனியம்மா மறைந்துவிட்டதாக சில முன்னணி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மறுப்பு செய்தி வெளியிட்ட நிலையில் உடன் இருந்து அவரை கவனித்துக்கொண்ட நடிகர் அபி சரவணன் அந்த மூதாட்டி பேசும் வீடியோவை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 84  வயதாகும் பரவை முனியம்மா பாடகியாகவும், நடிகையாகவும் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். தமிழில் தூள் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைத்தும், குத்தாட்டம் போட வைத்தும் பிரபலமானவர் நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா. வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்தார்.கடந்த சில வருடங்களாக அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதால் படங்களில் நடிக்கவோ பாடவோ இல்லை. சிறுநீரகம் தொடர்பான பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவர் முன்னரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், பின்னர் மூச்சுத் திணறல் காரணமாக மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில் பரவை முனியம்மா மீண்டும் அனுமதிக்கப்பட்டார். 

பரவை முனியம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவருக்கு தேவையான உதவிகளை நடிகர் அபி சரவணன் செய்து வந்தார். இந்த நிலையில் தான் பரவை முனியம்மா சிகிச்சை செலவுகளை மருத்துவமனை நிர்வாகமே ஏற்றுக்கொண்டது. அதேபோல நடிகர் சங்கம் உதவிக்கு வந்தது. தற்போது சிகிச்சை பெற்று நலமுடன் பரவை முனியம்மா வீடு திரும்பியுள்ளார். அதனை மகிழ்வுடன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அபி சரவணன் , "பரவை முனியம்மா பாட்டி நலமுடன் வீடு திரும்பினார். இலவச மருத்துவம் அளித்த வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகத்திற்கும், நடிகர் சங்கத்திற்கும், அனைத்து சங்க பொறுப்பாளர்களுக்கும், திரு.ஜசரி கணேஷ் சார், நாசர் சார், கருணாஸ் அண்ணா அவர்கள் மற்றும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.