‘சின்னக்குயில் பாடும் பாட்டு கேக்குதா’ பாடல் நமக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளவைக்கும் பாடலாக இருக்கலாம். ஆனால் பாடகி சித்ராவுக்கோ தனது செல்ல மகள் நினைவை மீட்டி சொல்லொன்ணாத் துயரில் ஆழ்த்தும் பாடல்.

மறைந்த அம்மகளின் நினைவாக கேரள கேன்சர் மருத்துவமனை ஒன்றுக்கு கீமோ சிகிச்சைப் பிரிவு ஒன்றைக் கட்டிக்கொடுத்துள்ளார் சின்னக்குயில் சித்ரா.

தமிழ், தெலுங்கு,மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் சித்ராவுக்கு  அவரது பாடல்களை விட இனிமையான மனசு. இவரது கணவர் விஜயசங்கர்.  ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இவர்களது ஒரே மகள் நந்தனா, 2011 ஆம் ஆண்டு துபாயில் நீச்சல்குளத்தில் மூழ்கி இறந்தார்.

அந்த செல்ல மகளின் நினைவாக, தொடர்ந்து பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார் சித்ரா. இவர் இப்போது கேரளாவின் பருமுலாவில் உள்ள புனித கிரிகோரியஸ் சர்வதேச கேன்சர் மையத்தில், கீமோ தெரபி சிகிச்சை பிரிவை இலவசமாகக் கட்டிக்கொடுத்துள்ளார்.

இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட சித்ரா, எப்போதும் போலவே மகள் பற்றிப் பேசத்துவங்கியதும் பேசமுடியாமல் விம்மினார். பின்னர், பைத்தலம் ஏசுவே என்ற கிறிஸ்தவ பாடலைவிட்டு பேச்சை முடித்தார்.