ஹாலிவுட்டில் தொடங்கிய 'மீ டூ' விவகாரம் பாலிவுட், டோலிவுட்டைத் தாண்டி, கோலிவுட் வரை புயலைக் கிளப்பியது. ட்விட்டரில் ட்ரெண்டான #METOO ஹேஷ்டேக் மூலம் ஏராளமான நடிகைகள் திரையுலகில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளியுலகிற்கு எடுத்துரைத்தனர். அப்படி தமிழ் திரையுலகில் வெடித்த மிகப்பெரிய சம்பவம் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து விவகாரம். 

சுவிட்சர்லாந்திற்கு இசை நிகழ்ச்சிக்காக சென்ற போது வைரமுத்து தனக்காக தனி அறையில் காத்திருந்ததாக கூறி புயலைக் கிளப்பினர் சின்மயி. மேலும் "வைரமுத்து சார் நீங்க என்ன செய்தீர்கள் என்று உங்களுக்கு தெரியும். சினிமாவில் எனக்கு வாய்ப்பு போனாலும் பரவாயில்லை" என டுவிட்டரில் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். 

மேலும் வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து, டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்ட சின்மயி, தொடர்ந்து வைரமுத்து குறித்து சோசியல் மீடியாவில் விமர்சித்து வருகிறார். எந்த நிகழ்ச்சிக்கு வைரமுத்துவை சிறப்பு விருந்தினராக அழைத்தாலும், ஆத்திரத்தில் பொங்கியெழும் சின்மயி, நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தொடங்கி வைரமுத்து உட்பட அனைவரையும் கிழி, கிழியென டுவிட்டரில் கிழித்தெடுக்கிறார். 

தற்போது தனியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் வைரமுத்துவிற்கு இலக்கியத்திற்கான டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார். அந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார் பாடகி சின்மயி.

அதில் "9 இளம் பெண்கள் பாலியல் புகாரளித்த வைரமுத்துவிற்கு இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்க உள்ளார். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் வருவதில்லை, ஆனால் புகார் அளித்த என் மீது வேலைக்கு தான் தடை விதிக்கப்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளார். 

மேலும் "அவரது மொழி புலமைக்காக தான் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது என்பதை நான் நன்கு அறிவேன். அதே போல் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதற்காகவும் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம். இதுதான் மாணவர்களுக்கு அந்த தனியார் பல்கலைக்கழகம் காட்டும் சிறந்த உதாரணம்" என கடுமையாக சாடியுள்ளார். 

"கடந்த ஒரு வருடமாக வைரமுத்து, பெரிய ஸ்டார்களின் படங்களில் பணியாற்றி வருகிறார், உலகம் முழுவதும் பயணம் செய்கிறார், அரசியல் தலைவர்கள் மற்றும் கலை உலக பெரியவர்களுடன் பிரம்மாண்ட மேடையை அலங்கரிக்கிறார். அவர் மீது கூறப்பட்ட புகாரை விசாரிக்க கூட யாரும் முயற்சி எடுக்கவில்லை. சட்டமும் தயாராக இல்லை. நல்ல நாடு, நல்ல மக்கள்" என கடும் கொதிப்பான பதிவை போட்டு, முடிந்து போன மீடூ பிரச்சனையை மீண்டும் கிளப்பியிருக்கிறார் சின்மயி.