Asianet News TamilAsianet News Tamil

இராவணன் டூ பொன்னியின் செல்வன்... பாடிய பாடல்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்! யார் இந்த பம்பா பாக்யா?

Bamba Bakya Songs : தமிழ் சினிமாவில் குறைந்த அளவிலான பாடல்களை மட்டுமே பாடகர் பம்பா பாக்யா பாடி இருந்தாலும், அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனவை. அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

singer Bamba Bakya hit songs From Raavanan to ponniyin selvan
Author
First Published Sep 2, 2022, 10:03 AM IST

பாடகர் பம்பா பாக்யா இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். 49 வயதே ஆகும் அவர் திடீரென மரணமடைந்து இருப்பது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பாக்யா என்ற பெயருடன் கச்சேரிகளில் பாடி வந்த இவரை பம்பா பாக்யா ஆக்கியது ஏ.ஆர்.ரகுமான் தான். பம்பா என்கிற ஆப்ரிக்க நாட்டு பாடகரைப் போல் இவர் பாடுவதால் இவரது பெயரின் முன் பம்பா என இணைத்ததோடு மட்டுமின்றி இவர் அணியும் உடையும் அவரைப்போன்றே இருக்க வேண்டும் என கூறினாராம் ரகுமான். 

இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கண்டெடுத்த முத்து தான் பம்பா பாக்யா என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தனித்துவமான குரல் வளத்துடன் மனதை வருடும் பல பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத பாடல்கள் ஆகும். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கிடா கிடா கறி அடுப்புல கிடக்கு - இராவணன்

பம்பா பாக்யா பாடிய முதல் பாடல் என்றால் அது ‘கிடா கிடா கறி அடுப்புல கிடக்கு' என்கிற பாடல் தான். மணிரத்னம் இயக்கிய இராவணன் படத்தில் இடம்பெறும் இப்பாடலை பென்னி தயால் உடன் இணைந்து பாடி இருந்தார் பம்பா பாக்யா. இப்பாடல் ஹிட் ஆனபோது அவருக்கு அடுத்தடுத்து பாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

புல்லினங்கால் - எந்திரன் 2.0

இராவணன் படத்துக்கு பின் 8 ஆண்டுகள் பாட வாய்ப்பின்றி தவித்த பம்பா பாக்யாவிற்கு மீண்டும் வாய்ப்பளித்தது ஏ.ஆர்.ரகுமான். அவர் தனது இசையில் உருவான எந்திரன் 2.0 படத்தில் இடம்பெறும் புல்லினங்கால் என்கிற பாடலை பம்பா பாக்யாவை பாட வைத்தார். ஷங்கரின் பிரம்மாண்ட காட்சியமைப்பிற்கு இப்பாடல் கூடுதல் பலம் சேர்ந்தது என்றே சொல்லலாம்.

சிம்டாங்காரன் - சர்கார்

பம்பா பாக்யாவிற்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத்தந்த பாடல் என்றா அது சிம்டாங்காரன் தான். சர்கார் படத்தில் இடம்பெறும் இப்பாடலை சென்னை தமிழில் படு லோக்கலாக பாடி அசத்தி இருப்பார் பம்பா பாக்யா. இவரது குரலில் இப்பாடலை முதன்முதலில் கேட்ட உடன் நடிகர் விஜய்யே மெர்சலாகிப் போனாராம்.

காலமே காலமே - பிகில்

பம்பா பாக்யா பாடிய மற்றுமொரு உணர்வுப்பூர்வமான பாடல் என்றால் அது காலமே காலமே பாடல் தான். அட்லீ இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான பிகில் படத்தில் ராயப்பன் கொல்லப்படும்போது இந்த பாடல் இடம்பெற்று இருக்கும். அந்த காட்சியின் வலியை தனது குரலால் உணரச் செய்து அனைவரையும் கண்கலங்க வைத்திருப்பார் பம்பா பாக்யா.

பெஜாரா - இரவின் நிழல்

பார்த்திபன் இயக்கத்தில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட சாதனைத் திரைப்படமான இரவின் நிழல் படத்தில் இடம்பெறும் பெஜாரா என்கிற பாடலை பாடியதும் பம்பா பாக்யா தான். அவரின் குரலில் வெளியான இப்பாடல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் இன்றளவும் டிரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொன்னி நதி - பொன்னியின் செல்வன்

மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வனில் இருந்து வெளியான முதல் பாடலான பொன்னி நதி பாடலை ஏ.ஆர்.ரகுமான் உடன் இணைந்து பாடி இருந்தார் பம்பா பாக்யா. இப்படத்தின் ஆரம்ப வரிகள் சிலவற்றை இவர் பாடி இருந்தார். இப்பாடல் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆன போதும் இன்றளவும் டிரெண்டிங்கில் உள்ளது.

ராட்டி ஆல்பம் பாடல்

பம்பா பாக்யா பாடிய ஆல்பம் பாடல் தான் ராட்டி. சந்தோஷ் தயாநிதி இசையில் வெளியான இந்த ஆல்பத்தில் இடம்பெறும் “எதுக்கு உன்ன பார்த்தேன்னு புலம்ப வைக்குறியே” என்ற பாடலை பம்பா பாக்யா பாடி இருந்தார். இளசுகளின் மனம்கவர்ந்த பாடலாக இது இருந்து வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios