இந்தியாவின் என்று சொல்லி அவரது புல்லாங்குழலை இன்சல்ட் செய்துவிடக்கூடாது, உலகின் மிக முக்கியமான புல்லாங்குழல் கலைஞரும், இன்றைய தலைமுறை அவ்வளவாக அறியாத, ஆகச் சிறந்த பாடகருமான நெப்போலியன் செல்வராஜ் என்கிற அருண்மொழிக்கு இன்று பிறந்தநாள்.

‘வெள்ளிக் கொலுசு மணி’...’நான் என்பதும் நீ அல்லவோ தேவதேவி’...’வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா’...’நீதானா நீதானா நெஞ்சே நீதானா’...’மனசுக்குள்ள நாயனச்சத்தம்’... ‘நீலக்குயிலே சோலைக்குயிலே’...’அரும்பும் தளிரே’...’கன்யாகுமரி நீயே’ என்று நீளும் பட்டியலில் நூற்றுக்கும் மேற்பட்ட மனதைச் சுண்டி இழுக்கும் பாடல்களையாவது பாடியிருப்பார் அருண்மொழி. 

எஸ்.பி.பி. மலேசியா வாசுதேவன், மனோ போன்றவர்கள் அளவுக்கு அருண்மொழி பாடகராக புகழ்பெறவில்லை என்பது ஒரு சிலருக்கு மனக்குறையாக இருக்கலாம். ஆனால் புகழ்பெற்ற பாடகர் என்பதை விட ராஜாவின் மனசுக்கு நெருக்கமான புல்லாங்குழல் கலைஞனாக இருக்கவே அருண்மொழி விரும்பினார். நெப்போலியன் செல்வராஜ் என்ற பெயரை அருண்மொழி என்று பிரியமாய் மாற்றியவரும் ராஜாவேதான்.

ராஜாவிடம் இதுவரை ஒருமுறை கூட திட்டுவாங்காத, அவ்வளவு ஏன் ராஜாவின் சின்ன கோபப் பார்வையைக் கூட சந்தித்திராத ஒரே ஆத்மா அருண்மொழி மட்டும்தான்.

இன்றைய அவரது பிறந்த நாளைமுன்னிட்டு சில வருடங்களுக்கு ரேடியோஸ்பதியில் வெளியான மிக சுவாரசியமான இந்தப் பேட்டியைப் படியுங்கள்...

இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ் தான் என்னை அறிமுகம் செய்தார்கள்.

- மலையாளப் படத்திற்கு பயிற்சி செய்து கொண்டிருக்கும்போதுதான் இளையராஜா என் வாசிப்பை கேட்டு என்னை சேர்த்துக் கொண்டார். அவருடன் சேர்வதற்கு முன்னால் பெரும்பாலான எல்லா இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றி இருந்தேன்.

- 'ஒரே முறை உன் தரிசனம்' இளையராஜாவுடன் என் முதல் பாடல். அதில் வரும் புல்லாங்குழல் இசை என்னுடையது.

- பாடகரானதும் சுவையான அனுபவம் தான். ராஜா பாடகர்களுக்கு ரிட்டர்ன் நோட்ஸ் தான் எழுதுவார். அது வெஸ்டர்ன் நோட்ஸில் இருக்கும். ஆரம்பத்தில் புரியவில்லை. பின்னர் அதை நானே கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு விளக்கும் அளவுக்கு தேறினேன். நான் அப்படி வாய்ஸ் ரூமில் பாடிக்காட்டுவதை ஹெட்போனில் ராஜா சார் கேட்டார். அப்படித்தான் ஒருமுறை கங்கை அமரன் பாடிய ஒரு பாடலை என்னை பாட வைத்து வாய்ஸ் தேர்வு செய்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் படம் ரிலீஸாகவில்லை.

அடுத்த நாளே சூரசம்ஹாரம் பட பூஜை. அதில் பாடினேன். அவராகவே அருண்மொழி எனப் பெயரிட்டார். வாலியும் ராஜாவும் சேர்ந்து இட்டப் பெயர். அன்று நான் பாடிய பாடல் தான் ‘நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி’. அதில் எல்லாப் பாடல்களும் நான் தான் பாடினேன். அது பெரிய ஹிட் ஆனது. அதற்குப் பிறகு நிறைய வாய்ப்புகள்.

- பார்த்திபனுக்காக என் குரலை யாரும் தேர்ந்தெடுக்கவில்லை. அது தானாக அமைந்தது. எதேச்சையாக அவருக்கு பாடப்போய், என் குரல் அவருக்கு மாட்ச் ஆனதும், பார்த்திபனே என்னை மற்ற இசையமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்று பாட வைத்தார்.

- பிற இசையமைப்பாளர்களிடம்: ‘சலக்கு சலக்கு சரிகை சேலை’ எஸ்.ஏ.ராஜ்குமாரிடம் பாடிய பிறகு அதேபோல் குத்துப் பாடல்களாக தொடர்ந்து வர ஆரம்பித்தன. அதனால்தான் பாடுவதை நிறுத்தினேன். 

- பாடல்கள் கூட எழுதியிருக்கிறேன். ‘எனக்கொரு மகன் பிறப்பான்’ படத்தில் எல்லா பாடல்களும் நான் தான் எழுதினேன். போலவே, அரசியல் படத்திலும், வித்யாசகர் இசையில் ‘வாசுகி வா சகி’ பாடலும் நான் எழுதியது.

- பாடகர் அருண்மொழியை விட இசைக் கலைஞர் அருண்மொழிதான் எனக்குப் பிடிக்கும்.

- நான் பணியாற்றிய பாடல்களில் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘இள நெஞ்சே வா’, ‘தாலாட்டும் பூங்காற்று நீ அல்லவா’ ஆகிய பாடல்களிலும், சின்னத்தம்பி படத்தின் பாடல்களிலும் புல்லாங்குழலுக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தன. அப்படி இன்னும் பலப்பாடல்கள் உள்ளன.

- ராஜாவின் பாரவையிலேயில் நான் விஜய்க்கு பாடிய சோகப் பாடல் ‘அம்மன் கோவில் எல்லாமே’ நான் ட்ராக் பாடியது. அதை அப்படியே படத்தில் பயன்படுத்திக்கொண்டு விட்டார்கள்.

- அஞ்சலி, மௌனராகம் இப்படி கிட்டத்தட்ட எல்லா படங்களையுமே பின்னணி இசையில் வேலை வாங்கிய படங்களாகச் சொல்லலாம். அவற்றுள் ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தின் ரீ ரெகார்டிங்கை ராஜா சார் என்னை செய்ய சொல்லிக்கொடுத்து விட்டார். நாட்டுப்புறப் பாட்டு படத்தையும் நானே செய்தேன். இப்படி சில படங்களில் என்னுடைய ரீ ரெகார்டிங் பங்களிப்பு இருந்தது.

- ராஜா சாரிடம் பணியாற்றி வருவது பெருமைக்குரிய விஷயம். இதுவரை நான் அவரிடம் ஒரு கோபச்சொல் கூட வாங்காதது என் அதிர்ஷ்டம்.

- இன்றைய இசை மிகவும் மாறிவிட்டது. என்னால் அதன் வித்தியாசத்தை உணர முடிகிறது. அன்று 20 முறை ரிகர்சல் செய்து வாசித்த காலம் மாறிவிட்டது. இப்போது சில சமயம் வீட்டில் வாசித்து ஈமெயில் நான் அனுப்பிவிட்டால், அதையே கூட பயன்படுத்திக்கொண்டு விடுகிறார்கள். தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது.