வெயிட் லாஸ் ஜர்னியை வீடியோவாக வெளியிட்டுள்ள சிம்பு, 105 கிலோவில் இருந்து 72 கிலோ வரை உடல் எடையை குறைக்க என்னென்ன செய்தார் என்பதை காட்சிப்படுத்தி உள்ளனர்.

பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான டி.ராஜேந்தரின்( T Rajendhar) மகனான சிம்பு, சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் தன்னுடைய தந்தையின் படங்களில் மட்டுமே நடித்து வந்த சிம்பு, பின்னர் ஹீரோவாக மாறி ஆக்‌ஷன், காதல், காமெடி என நடிப்பில் தனி முத்திரை பதித்தார். 

இவர் தன் தந்தையை போலவே நடிப்பு, இசை, இயக்கம், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வருகிறார். நடிகர் சிம்புவுக்கு ஏகப்பட்ட திறமை இருந்தாலும், எப்போதும் அவரை சுற்றி சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. இதுவே ஒரு கட்டத்தில் அவருக்கு மைனஸாகவும் அமைந்தது.

2010-ம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு பின் சிம்புவின் கெரியர் கடும் சரிவை சந்தித்தது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த சிம்பு, ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி குண்டானார். அந்த சமயத்தில் அவர் உருவகேலியையும் எதிர்கொண்டார். 

சிம்புவின் கெரியர் அவ்வளவு தான் என சினிமா வட்டாரத்தில் பேசத் தொடங்கினர். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா முதல் அலையின் போது ஊரடங்கு போடப்பட்ட சமயத்தில், உடல் எடையை குறைக்க முடிவெடுத்த சிம்பு, 6 மாதங்களில் 33 கிலோ உடல் எடையை குறைத்து, தன்னை பற்றி விமர்சித்தவர்கள் எல்லாம் மூக்கில் மீது விரல் வைக்கும் அளவுக்கு ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறி ஆச்சர்யப்படுத்தினார்.

சிம்புவின் இந்த வெயிட் லாஸ் ஜர்னியை வீடியோவாக வெளியிடுமாறு ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதனை ஏற்று தற்போது அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் சிம்பு, ஆத்மன் (Atman) என பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், அவர் 105 கிலோவில் இருந்து 72 கிலோ வரை உடல் எடையை குறைத்தது வரை என்னென்ன செய்தார் என்பதை காட்சிப்படுத்தி உள்ளனர்.

அதன்படி நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, உடற்பயிற்சி, பரதநாட்டியம், வாள்வீச்சு உள்ளிட்டவற்றை செய்துள்ளார். இதுமட்டுமின்றி கிரிக்கெட், டென்னிஸ், பேட்மிண்டன், கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுளையும் விளையாடி உடல் எடையை குறைத்துள்ளார். உடல் எடையை குறைத்த பின் தன்னை அறியாமலேயே சிம்பு கண்கலங்கிய நெகிழ்ச்சியான காட்சியும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. ரசிகர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ள அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

YouTube video player