விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா.. ஆகிய இரு படங்களைத் தொடர்ந்து சிம்புவை மீண்டும் இயக்குகிறார் கவுதம் வாசுதேவ் மேனன். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா என்ற காதல் திரைப்படம் 2010ஆம் ஆண்டில் வெளியாகி ஹிட்டடித்தது. இதை அடுத்து மீண்டும் சிம்புவை, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய படம் அச்சம் என்பது மடமையடா. கடந்த ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெறத் தவறி விட்டது. இதன் பின்னர் சிம்புவை பழைய ஃபார்முக்கு கொண்டு வந்த படம் மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம்.

இந்த வெற்றியைத்தொடர்ந்து நடிகர் சிம்பு, கமர்ஷியல் இயக்குனர் சுந்தர் சியுடன் இணைந்துள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண், சமந்தா ஆகியோர் நடித்து 2013ல் வெளியாகி ஹிட்டடித்த அட்டரிண்டிக்கி தரேடி என்ற படத்தை சுந்தர் சி தமிழில் ரீமேக் செய்கிறார். இதில் சிம்பு நடித்து வருகிறார்.

 

லைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் மேகே ஆகாஷ், கேத்ரீன் தெரெசா, என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். சிம்புவின் ஆஸ்தான இசை அமைப்பாளரும், நண்பருமான யுவன் சங்கர் ராஜா தான் இந்தப் படத்திற்கும் இசை அமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் ஏற்கெனவே முடிவுற்ற நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், கவுதம் வாசுதேவ் மேனனுடன் சிம்பு மீண்டும் இணையவுள்ளார். இந்தப் படத்திற்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானே இசை அமைக்கவுள்ளார். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கமர்ஷியல் படமாக இது உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் என்று இந்தப் படம் கூறப்பட்ட நிலையில், படக்குழு இதனை மறுத்துள்ளது.  

ஆனால் இந்தப் படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது. மன்மதன், சிலம்பாட்டம் ஆகிய படங்களில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இந்த இரு படங்களுமே சிம்புவின் திரையுலகில் மிக முக்கியமான படங்களாகவும் அமைந்தன. இந்த நிலையில், மீண்டும் சிம்பு இரட்டைக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அவரது ரசிகர்களை உற்சாக கடலில் மிதக்க விட்டுள்ளது. படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.