நடிகர் சங்கம் இன்று முன்னின்று நடத்திய 'மௌன அறவழி போராட்டத்தில்' கலந்துக் கொள்ள தனக்கு அழைப்பு விடுக்க வில்லை என்று கூறி நடிகர் சிம்பு தி.நகரில் உள்ள தன்னுடைய வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது பேசிய இவர் "எதோ ஒரு காரணத்திற்கு தான் இந்த போராட்டம் நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும், நானும் தமிழகத்தில் நடந்து வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறேன் என்று கூறினார்.

மேலும் தற்போது, யாரவது பேசுவது தான் இங்கு பிரச்சனையே... மூடிகிட்டு இருந்தா எந்த பிரச்னையும் இல்லை தான் அநீதிக்கு எதிராக அதிகமாக பேசுவது தான் பலருக்கு பிரச்சனையாக இருந்து வருகிறது என்பது போல் சூசகமாக பொடி வைத்து பேசினார். 

பொதுவாக இங்கு 10 பேர் சொல்வதை வைத்துக்கொண்டு ஒரு பிரச்னையை திசை திருப்பி வருவதாகவும் அதனால் தற்போது மக்கள் தமிழகத்தில் என்னென்ன காமெடி நடக்கிறது, என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் இது குறித்து பின்னர் தான் பேசுவதாக கூறி சொல்ல வந்ததை கூட சொல்லாமல் மழுப்பி விட்டார்.

மேலும் தமிழகத்தில் எப்போதும் பிரச்சனைக்கு மேல பிரச்சனை இருப்பதாகவும் அரசியல் ரீதியாகவும், மற்ற திசைகளில் இருந்தும் தொடர்ந்து பல பிரச்சனைகளை தமிழகம் சந்தித்துக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக மழை, சினிமா வேலை நிறுத்தம் என்று கூறலாம் என தெரிவித்தார்.

தமிழகத்தின் முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்ததில் இருந்து தமிழகத்திற்கே சூனியம் வைத்தது போல் பல பிரச்சனைகள் வந்துக் கொண்டு தான் இருக்கிறது என்றும், இதற்கு முடிவு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த உண்மை வெளியே வரவேண்டும் என்றும் அப்போது தான் தமிழகத்திற்கு விடிவு காலம் கிடைக்கும் என தெரிவித்தார் சிம்பு.