தமிழில் சிம்பு (Simbu) நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற மாநாடு (Maanaadu) படத்தை இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் ரீமேக் செய்ய கடும் போட்டி நிலவி வருகிறது. 

வெங்கட் பிரபு (Venkat Prabhu) இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருந்தனர். 

பல்வேறு தடைகளை தாண்டி கடந்த மாதம் 25-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதோடு வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது. தொடர்ந்து பல்வேறு தோல்விகளை சந்தித்து வந்த சிம்பு, இப்படத்தின் மூலம் மாஸான கம்பேக் கொடுத்துள்ளார். தமிழில் வெற்றிபெற்ற இப்படத்தை இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் ரீமேக் செய்ய கடும் போட்டி நிலவி வருகிறது. 

இப்படத்தில் சிம்புவின் நடிப்பு அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. குறிப்பாக இதில் வரும் சேர் சீனை சிம்பு ஒரே டேக்கில் நடித்து அசத்தியதாகவும், எடிட்டிங்கில் அந்த காட்சி சுருக்கப்பட்டு இருந்தாலும், அதன் முழு வீடியோவை படத்தின் ரிலீசுக்கு பின் வெளியிடுவோம் என இயக்குனர் வெங்கட் பிரபு கூறி இருந்தார். 

சொன்னபடியே அந்த வீடியோவை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். 5 நிமிடம் ஓடக்கூடிய அந்த காட்சியை நடிகர் சிம்பு ஒரே டேக்கில் நடித்து அசத்தியுள்ளார். இதைப் பார்த்து படக்குழுவினரே வியப்படைந்து சிம்புவுக்கு கைதட்டி வாழ்த்துக்களை தெரிவித்ததும் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

YouTube video player