காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் சிம்பு (Simbu), தற்போது குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தரின் மகனான சிம்பு, தன் தந்தையைப் போலவே தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்காமல் தவித்து வந்த சிம்புவுக்கு சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றுத்தந்தது.

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வந்தார் சிம்பு. இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் நடைபெற்றது. இதில் நடித்து முடித்து சென்னை திரும்பிய சிம்புவுக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

சிம்பு சீக்கிரம் நலம்பெற வேண்டி ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில், தற்போது காய்ச்சலில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், நீங்க இல்லாம நானில்ல என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
