தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிம்புவும் (Simbu) தனுஷும் (Dhanush), பட வெளியீட்டில் நேரடியாக மோத உள்ளனர்.
தமிழ் சினிமாவில் இருமுனைப்போட்டி என்பது நீண்ட காலமாகவே நீடித்து வருகிறது. எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் -அஜித், சிம்பு - தனுஷ் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பெரும்பாலும் போட்டியாக கருதப்படும் இந்த நடிகர்கள் நிஜத்தில் நெருங்கிய நண்பர்களாகவே இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களின் ரசிகர்கள் அப்படியில்லை. இணையத்தில் அவர்கள் நடத்தும் வார்த்தை மோதல்களுக்கு அளவே இல்லை என்றே சொல்லலாம். சில சமயங்களில் இந்த நடிகர்களின் படங்களை ஒரே நாளில் வெளியிட்டு வர்த்தக ரீதியான போட்டியும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது சிம்பு - தனுஷ் படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளன. தனுஷ் இந்தியில் நடித்துள்ள அத்ரங்கி ரே என்கிற திரைப்படம் வருகிற டிசம்பர் 24-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது. இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ‘கலாட்டா கல்யாணம்’ என்ற பெயரில் அன்றைய தினம் ரிலீசாக உள்ளது. இப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், அந்த படத்துக்கு போட்டியாக சிம்புவின் மாநாடு திரைப்படமும் அன்றைய தினம் ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளது. இந்த படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மாநாடு படம் கடந்த மாதம் திரையரங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

ஓடிடி-யில் ஒரேநாளில் வெளியாகும் இந்தப் படங்களில் எது அதிக பார்வையாளர்களை சென்றடையப் போகிறது என்பதைப் பற்றி சிம்பு - தனுஷ் ரசிகர்கள் இப்போதே சண்டையை ஆரம்பித்துள்ளனர்.
