சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன். மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இதில் சிம்புவிற்கு ஜோடியாக பூமி படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்த நிதி அகர்வால் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிட்டி பாயாக இதுவரை பல படங்களில் கலக்கி வந்த சிம்புவை முழுக்க முழுக்க கிராமத்து இளைஞராகவே சுசீந்திரன் மாற்றியிருக்கிறார். இந்த படத்திற்காக சிம்புவும் 101 கிலோ இருந்த உடல் எடையை குறைத்து சும்மா ஜிம்முன்னு மாறினார். 

பழனி முருகன் கோவிலை மையமாக கொண்டு எடுக்கப்படும் கதை என்பதால் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஷூட்டிங் நடைபெற்றது. சிம்பு என்றாலே கால்ஷீட் சொதப்பல் என்ற வரலாற்றை மாற்றி இருக்கிறார் சுசீந்திரன், சொன்னபடி 23 நாட்களில் படத்தை நடித்து முடித்துக் கொடுத்து கெத்து காட்டியிருக்கிறார் சிம்பு. ஏற்கனவே சிம்பு தனது டப்பிங் பணிகளையும் முடித்துக் கொடுத்துவிட்ட நிலையில், இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வந்தன. அதுவும் முடிந்து நேற்று முன்தினம் தணிக்கைக்காக படக்குழு விண்ணப்பித்திருந்தது. 

தற்போது அந்த பணியும் நிறைவடைந்து, 'ஈஸ்வரன்' படத்துக்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. இதனால், படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜனவரி 14-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இதனை புதிய  போஸ்டருடன் சிம்பு தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு போட்டியாக சிம்புவின் ஈஸ்வரன் படமும் களமிறங்குவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.