"பூவரசம் பீப்பீ" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஹலிதா ஷமீம். இந்த படம் அனைவரிடமும் விமர்சன ரீதியாக பல பாராட்டுக்களைப் பெற்றார். இருந்தாலும் வணீக ரீதியாக வெற்றி என்று சொல்ல முடியாது . பின் நீண்ட இடைவெளிக்கு பின் சில்லுக்கருப்பட்டி என்ற ஆந்தாலஜி படத்தை இயக்கினார். சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை வெளியிட்டது. 

சாமானிய மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் 4 வித்தியாசமான கதைகளின் தொகுப்பாக வெளிவந்த சில்லுக்கருப்பட்டி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகுந்த வரவேற்பை பெற்றது. பூவரசம் பீப்பிக்கு பிறகு புதுமையான முயற்சியில் இறங்கிய ஹலீதா தற்போது அதை தொடர முடிவெடுத்துள்ளார்.

முதல் படத்திற்கு பிறகு தனது இரண்டாவது படமாக ‘மின்மினி’ யை அவர் தொடங்கினாலும், இடையில் அப்படத்தை நிறுத்திவிட்டு ‘சில்லுக் கருப்பட்டி’ படத்தை இயக்கி முடித்தார். இதற்கு காரணம், ஹலீதா மேற்கொண்ட புதிய முயற்சி தான். வழக்கமாக தமிழ் சினிமாவில் சிறுவராக ஒருவரும், இளம் வயதில் மற்றொருவரும் நடிப்பது தான் வழக்கம். ஆனால் இவரோ சின்ன வயதில் நடித்தவர்களே, இளம் வயதிலும் நடிக்க வேண்டுமென முடிவு செய்தார். அதற்காக 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதால் தான், இடையில் சில்லுக்கருப்பட்டி படத்தை எடுத்து முடித்தார். 

தற்போது அந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டதால், படத்தை வெளியிடும் வேலையில் இறங்கியுள்ளனர். இந்த ஆண்டின் இறுதியில் YNOT ஸ்டூடியோ & ரிலையன்ஸ் என்டர்டைன்மெண்ட் படத்தை வெளியிட உள்ளது. மின்மினி  படம் இளம் பருவத்தினரின் காதல் வெளிப்பாடு, தோல்வி ஆகியவற்றின் கலவையாக இருக்கும் என இயக்குநரே தெரிவித்துள்ளார்.