தமிழ் சினிமா ஓவர் செண்டிமெண்டுகளால் நிறைந்தது எனும் வகையில் மாபெரும் வெற்றிபெற்ற சத்யராஜின் ‘வால்டர் வெற்றிவேல்’பட டைட்டிலில் பாதியைச் சுருக்கி அடுத்த சிபிராஜ் படத்துக்கு ‘வால்டர்’என்று வைத்திருக்கிறார்கள்.இதில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சிபிராஜ், ஷிரின் கான்ச்வாலா நடிப்பில் உருவாகி வரும் ’வால்டர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இயக்குநர் கௌதம் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்ட செய்தியே பரபரப்பாகிக்கொண்டிருந்த நிலையில், மற்றொரு ஆச்சர்யமாக தேசிய விருது பெற்ற இயக்குநர் சமுத்திரக்கனியும் இப்படத்தில் நடிக்கவுள்ளார். 

சத்யராஜ் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற படம் வால்டர் வெற்றிவேல். சினிமாவில் காவல்துறை அதிகாரிகளின் காட்சிகள் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த அமைந்தது. தற்போது புதுமுக இயக்குநர் அன்பு இயக்கும் இப்படமும் அதே காவல் துறையின் கடமை,கண்ணியம், கட்டுப்பாடு தொடர்பான படம் என்றும் சிபிராஜுக்கு இப்படம் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

சிபிராஜ் ஜோடியாக ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் நடித்த ஷிரின் கான்ச்வாலா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதை அறிவிக்கும் விதமாக கௌதம் மேனன் மற்றும் சமுத்திரக்கனியுடன் ஆகியோருடன் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படத்தை நடிகர் சிபிராஜ் ட்விட்டரில் பதிவுட்டுள்ளார். அதற்கு பலரும் லைக் செய்து, ஷேர் செய்து வருகின்றனர். மேலும், கவுதம் மேனன், சமுத்திரக்கனி ஆகிய இருவருடன் இணைந்து வேலை செய்வது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இது தனக்கு பெருமை அளிப்பதாகவும் நடிகர் சிபிராஜ் தெரிவித்துள்ளார்.