கமல்ஹாசனை வைத்து தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா உடன் நடிகர் விக்ரம் இணைகிறார்.

விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள சாமி திரைப்படத்தின் இரண்டாம் பாகமான சாமி ஸ்கொயர் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனமே கிடைத்துள்ளது. இருப்பினும் சாமி ஸ்கொயர் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை. 

இந்த நிலையில் விக்ரம் அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

அது என்னவென்றால் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து தூங்காவனம் என்ற ரீமேக் படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வாவுடன் விக்ரம் இணைய உள்ளார் என்பதே ஆகும்.  தூங்காவனத்தை போலவே இத்திரைப்படமும் ரீமேக் என்று கூறப்படுகிறது. ஹாலிவுட்டில் மட்டுமல்லாது அனைத்து திரையுலகிலும் பேசப்பட்ட don't breathe என்ற படத்தை ராஜேஷ் எம் செல்வா ரீமேக் செய்ய உள்ளார். 

இந்தப் படத்தில் பிரபல நடிகர் ஸ்டீபன் லேங் பார்வையற்ற முன்னாள் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருப்பார். இந்தப் படத்தை ரீமேக் செய்தாலும் அதில் நடிக்க விக்ரமே சிறந்தவராக இருப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதில் விக்ரமுடன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார். படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அண்மைக்காலமாக கமல்ஹாசனின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் ஜிப்ரானே இந்தப் படத்திற்கும் இசை அமைக்க உள்ளார். படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.