அங்கம்மாள் திரைப்படம் சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ
‘கோடித்துணி’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘அங்கம்மாள்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் விமர்சனத்தை பார்க்கலாம்.

Angammal Movie Review
சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அங்கம்மாள்’. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படத்தில் கீதா கைலாசம் அங்கம்மாளாக நடித்துள்ளார்.
அங்கம்மாள் படத்தின் கதை
கீதா கைலாசத்துக்கு பரணி மற்றும் சரண் என இரண்டு மகன்கள். பிடிவாதமும், தன் முடிவில் தானே இறுதி சொல்வதும் இவரின் இயல்புகள். பரணியும் சரணும் தாயாரிடம் எதிராக பேசவே பயப்படுபவர்கள். பரணி விவசாயத்தில் ஈடுபட, சரண் மருத்துவராகப் படிக்கிறார். ஒரு பணக்காரக் குடும்பப் பெண்ணுடன் சரணின் காதல் வளரும். பெண்ணின் தந்தையும் சம்மதம் தெரிவிக்கிறார்.
திருமணம் வரவிருக்கும் நிலையில், தாய் குடும்பம் நகரத்து வீட்டாரிடமே சிறியவர்களாகத் தோன்றக்கூடாது எனக் கவலைபடும் சரண். ஜாக்கெட் அணியாத தன் அம்மாவை அதை அணியச் சொல்ல வேண்டிய சூழலில் தள்ளப்படுகிறார். நேரடியாகச் சொல்ல தயங்கிய அவர், அண்ணியின் வாயிலாக அதைச் சொல்ல வைத்துவிடுகிறார். ஜாக்கெட் அணிய வேண்டிய கட்டாயம், அதற்கான அவளின் கடுப்பு, அதனால் உருவாகும் வாக்குவாதங்கள், குடும்பத்தின் உள்ளே நடைபெறும் மன அலையோட்டங்கள், இதுவே படத்தின் கதை.
அங்கம்மாள் திரைப்பட விமர்சனம்
அங்கம்மாளாக கீதா கைலாசத்தின் தோற்றம் மொத்தமும் புதிதாகப் பிரதிபலிக்கிறது. பச்சைக் குத்துதல், சுருட்டுப் பிடிக்கும் பழக்கம், மஞ்சள் படிந்த பற்கள், தன்னம்பிக்கையுடன் எல்லோரிடமும் வசைபாடும் நடத்தை, டிவிஎஸ் சாம்பில் ஊர் முழுக்க சுழலும் தீவிரமான குணம் என அனைத்திலும் அங்கம்மாளாகவே வாழ்ந்திருக்கிறார் கீதா கைலாசம்.
வடசென்னை சரண், மன அழுத்தத்துடன் தனது காதலை முன்னெடுக்கும் இளைஞராக நன்றாகத் தோன்றுகிறார். பரணியாக நடித்த நாடோடிகள் பரணி இதுவரை நடிக்காத அளவுக்கு நுட்பமான நடிப்பை வழங்கியுள்ளார். அவரது காதலியாக முல்லையரசி இனிமையுடன் கவனம் ஈர்க்கிறார். பரணியின் மனைவியாக வரும் தென்றல் ரகுநாதன், இயல்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். கிராமத்து பெண்கள், அங்கம்மாளின் நண்பர்கள், குழந்தைகள் என அனைவரும் மிக இயல்பாகப் படத்தை நிறைவு செய்கிறார்கள்.
அங்கம்மாள் படத்தின் ரிவ்யூ
ஒளிப்பதிவாளர் அஞ்சோய் சாமுவேலின் படத்தொகுப்பு தனியே பேசத்தக்கது. வறண்ட நிலக்காட்சிகளை மாயாஜாலமாக மாற்றிய விதம் திரையை அழகாக்குகிறது. முகமது மக்பூல் மான்சூரின் இசை, படத்துடன் ஒன்றி பயணிக்க வைக்கிறது. குறிப்பாக காற்றின் ஒலியைக் கலக்கமின்றி வடிவமைத்துள்ள சவுண்ட் டிசைன் அபாரமானது.
‘கோடித்துணி’ என்ற மிக எளிய கதையை திரை வடிவில் சொல்ல நினைத்த விபின் ராதாகிருஷ்ணனின் முயற்சியே பாராட்டப்பட வேண்டியது. நடிகர்களை சரியான சூழலில் பயன்படுத்தியமை, அவர்களிடம் இருந்து புதிய பரிணாமத்தை கொண்டுவந்தது என அனைத்தும் சிறப்பு. மெல்லிய கதையென்றாலும், அதன் ஆழத்தை உணர்ச்சியோடு விரிவாக்கி, உலகத் தரத்தில் நிற்கும் ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். மேலும், யதார்த்தத்தையும், மண்மனம் மாறாத படத்தை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

