திரையுலகில் அதிர்ச்சி... ரஜினி, விஜய், அஜித் படங்களில் நடித்த காமெடி நடிகர் சிவநாராயணமுர்த்தி திடீர் மரணம்!
தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ள காமெடி நடிகர்... பட்டுக்கோட்டை T. சிவநாராயணமுர்த்தி உடல்நல குறைவால் காலமானார். இவருடைய திடீர் மரணம் தமிழ் திரையுலக ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபல காமெடி நடிகர் சிவ நாராயணமூர்த்தி. தமிழில் பூந்தோட்டம் என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், அடையாளத்திற்காக தன்னுடைய ஊரான பட்டுக்கோட்டை என்பதையும் பெயரோடு இணைத்து கொண்டார்.
தமிழ் சினிமாவில், ரஜினிகாந்த், அஜித், விஜய், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுடனும்... வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடனும் இணைந்து பல படங்களில் காமெடி வேடத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். குறிப்பாக பல படங்களில் பெரிய மீசையோடும்... குண்டான உடலையும் வைத்து உடல் மொழியால் பல ரசிகர்களை சிரிக்க வைத்தவர்.
இவர், கடந்த சில மாதங்களாகவே உடல்நல குறைவு காரணமாக தன்னுடைய சொந்த ஊரில் தங்கி சிகிச்சை எடுத்து வந்த நிலையில், இன்று இரவு 8:30 மணிக்கு உடல்நல குறைவால் காலமானார். 67 வயதாகும் இவர் தமிழில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு புஷ்பவல்லி என்கிற மனைவியும், லோகேஷ், ராம்குமார் என்கிற இரண்டு ஆண் பிள்ளைகளும், ஸ்ரீதேவி என்கிற மகளும் உள்ளார்.
மேலும் இவருடைய இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் நாளை மதியம் 2 மணி அளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய மறைவு குறித்து அறிந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.