கொரோனா பிரச்சனை ஒரு புறம் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை சோதித்து பார்க்கிறது என்றால், மற்றொரு புறம், ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட பிரபலங்கள் மரணங்கள், மற்றும் உடல் நல பிரச்சனைகளால் அவர்கள் அவதிப்படும் செய்தி ரசிகர்களையும், திரையுலகை சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், தென்னிந்திய மொழிகளில் பல படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் நிஷிகாந்த் கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருடைய உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

இவர் தமிழில் மாதவன் நடித்த ’எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம், கோலிவுட் திரையுலகிலும் பிரபலமானவர். மேலும் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திருஷ்யம், படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தவர். தமிழில் இந்த படம் கமல் நடிப்பில் பாபநாசம் என்கிற பெயரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவருடைய உடல் நிலை விரைவில் நலம் பெற வேண்டும் என, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய பிராத்தனைகளை முன்வைத்து வருகிறார்கள். அதே நேரத்தில் மருத்துவமனை தரப்பில் இவருடைய உடல் நிலை சற்று மோசமாகவே உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த வருடம் துவங்கியதில் இருந்து, பாலிவுட் திரையுலகை சேர்ந்த, ரிஷி கபூர், இர்பான் கான், சுஷாந்த் சிங் என பல திறமையான மற்றும் முன்னணி பிரபலங்களை பாலிவுட் திரையுலகம் இழந்து விட்டது. மேலும் நடிகர் சஞ்சய் தத்   நுரைஈரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதாக நேற்று தகவல் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.