தமிழில் இருந்து கன்னடம் உருவானதாக கமல் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு சிவராஜ்குமார் கைதட்டியதாகவும் விமர்சனம் எழுந்தது.

Shiva Rajkumar Shuts Rumours : கமல்ஹாசன் தனது புதிய படம் 'தக் லைஃப்' பட விளம்பர நிகழ்வில், கன்னடம் தமிழில் இருந்து உருவானது என்று கூறியது கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வில் சிவராஜ்குமார் கமலுக்கு கைதட்டியதாக வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளார். கன்னட அமைப்புகள் 'தக் லைஃப்' படத்தை திரையிடக் கூடாது என்று வலியுறுத்தியதை அடுத்து, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை படத்திற்கு தடை விதித்துள்ளது. கமலின் கருத்துக்கு தான் உடன்படவில்லை என்று சிவராஜ்குமார் தெரிவித்தார்.

கமல் பேச்சை கேட்டு கைதட்டியது ஏன்?

மேலும் அவர் கூறுகையில், "எல்லா மொழிகளும் முக்கியம். ஆனால் தாய்மொழி விஷயத்தில் கன்னடத்திற்குத்தான் முன்னுரிமை. கன்னடத்திற்காக என் உயிரையே கொடுக்கவும் தயார் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன்." கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவீர்களா என்ற கேள்விக்கு, "அதை என்னால் கூற முடியாது. அவர் மூத்த நடிகர், நான் அவரது ரசிகன்" என்று பதிலளித்தார்.

கமல் பேசியபோது தான் கைதட்டியதாக பலர் தவறாக நினைப்பதாகவும் அவர் கூறினார். "நான் கைதட்டினேன், ஆனால் அது வேறு ஒரு கருத்துக்காக. நிகழ்வில் என்ன நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் நான் கைதட்டியது போல காட்சிகளை அவர்கள் காட்டுகிறார்கள். அவர் என்னை 'சித்தப்பா' என்று அழைத்ததற்காகத்தான் நான் கைதட்டினேன்" என்றார்.

தக் லைஃப் படத்துக்கு தடை

ஜூன் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இப்படம் கர்நாடகாவில் வெளியாகாது. கமல் மன்னிப்பு கேட்காததால் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில், கன்னடம் தமிழில் இருந்து உருவானது என்று கமல் கூறினார். பாஜக மற்றும் கன்னட அமைப்புகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் தான் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்வோம் என கன்னட அமைப்புகள் திட்டவட்டமாக கூறிவிட்டன. இருப்பினும் தன்னுடைய கருத்தில் தான் உறுதியாக இருப்பதாக கூறிய கமல், மன்னிப்பு கேட்கவே மாட்டேன் என உறுதிபட கூறிவிட்டார். இதனால் கர்நாடகாவில் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் ரிலீஸ் ஆகாது என கூறப்படுகிறது.

தக் லைஃப் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் உடன் சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இப்படம் வருகிறா ஜூன் 5ந் தேதி பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.