விளம்பரப்பட நிறுவனத்தார் ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ரூ 10 கோடி தர சம்மதித்த நிலையில் தனக்கு உடன்பாடு இல்லாததால் அதில் நடிக்க மறுப்புத் தெரிவித்திருக்கிறார் பிரபல இந்தி நடிகை ஷில்ஃபா ஷெட்டி. அவரது செயல் மற்ற நடிகைகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமிழில் பிரபு தேவாவுடன் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2007-ல் வெளியான ‘அப்னே’ என்ற இந்தி படத்தில் தர்மேந்திரா, சன்னிதியோல் ஆகியோருடன் நடித்தவர் அதன்பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார். ஷில்பா ஷெட்டியும், தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவும் 2009-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.  வெளிநாட்டில் நடந்த பிக்பிரதர்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் இவர்  இனவெறிக்கு ஆளான சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருகிறார் ஷில்பா. இந்தியில் தயாராகும் பெயரிடப்படாத நகைச்சுவை படத்தில் நடிக்க ஷில்பா ஷெட்டியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தை சபீர்கான் இயக்குகிறார். 

இந்த நிலையில் உடல் எடையை குறைக்கும் ஆயுர்வேத மருந்து விளம்பர படத்தில் நடிக்க ஷில்பாவை அணுகினர். இதற்காக அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் தருவதாகவும் பேசினர். ஆனால் அதில் நடிக்க ஷில்பா ஷெட்டி மறுத்து விட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ பெரிய தொகை கிடைக்கிறதே என்பதற்காக எனக்கு நம்பிக்கை இல்லாத விஷயங்களில் நடிக்க நான் விரும்ப மாட்டேன். மாத்திரைகள்  எப்போதுமே தற்காலிக தீர்வுதான். சரியான உணவு மற்றும் உடற்பயிற்சியால் மட்டுமே நோயில் இருந்து விடுபடமுடியும்’என்றார். இதே பாலிசியுடன் நடிகை சாய் பல்லவியும் தன்னைத் தேடி வந்த அழகு சாதனப் பொருள் விளம்பரப்படம் ஒன்றை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.